/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊருக்கு போகும்போது மறக்காம சொல்லீட்டு போங்க!
/
ஊருக்கு போகும்போது மறக்காம சொல்லீட்டு போங்க!
ADDED : பிப் 15, 2024 06:42 AM
கோவை : தொடரும் கொள்ளை, வழிப்பறி, அத்து மீறல்களை தடுக்க ரோந்து போலீசாரை அதிகரிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன், ஆர்.எஸ்.புரம் பகுதியில் பட்டபகலிலும், பீளமேட்டில் அதிகாலையும் வீட்டில் இருந்தவர்களை, கட்டிப் போட்டு கொள்ளை சம்பவம் நடைபெற்றது.
சில இடங்களில், வீட்டின் பூட்டை உடைத்து சிறிய அளவிலான கொள்ளை தொடர்ந்து நடந்து வருகிறது. இதேபோல பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்து முகவரி கேட்பது போலவும், நடந்து செல்பவர்கள், மொபட்டில் செல்லும் பெண்களிடம், செயின் பறிப்பு சம்பவமும் நடந்து வருகிறது.
இதுபோக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் நடந்து செல்லும் இளம்பெண்களிடம், மர்ம நபர்கள் அத்துமீறும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடந்த கொள்ளையில், சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பீளமேடு கொள்ளையில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். சிறிய அளவிலான நடந்து வரும் கொள்ளைகளில் பெரும்பாலும் திருடர்கள் சிக்காமல் இருந்து வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கோவையின் முக்கிய பகுதியான ஆர்.எஸ்.புரம், பீளமேடு பகுதிகளில் கொள்ளை சம்பவங்களும், லட்சுமி மில் பகுதிகளில் நகைப்பறிப்பு சம்பவங்களும் நடக்கின்றன. நள்ளிரவு நேரங்களில் போலீசார் ரோந்து வராததே இதற்கு காரணம்.
வழிப்பறி கொள்ளையர்கள் சி.சி.டி.வி., கேமராக்கள் இல்லாத இடங்களை தேர்வு செய்து நகைகளை பறித்து வருகின்றனர். ஏதாவது தகராறு, அசம்பாவித சம்பவங்கள் குறித்து தகவல் தெரிவிக்க, போலீஸ் ஸ்டேஷன் 'லேண்ட் லைன்' எண்ணுக்கு அழைத்தால் எடுப்பது இல்லை. 100க்கு அழைத்து, தகவல் தெரிவித்து போலீசார் வருவதற்குள் தகராறில் ஈடுபடுபவர்கள், தப்பி சென்று விடுகின்றனர்.
இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாத இடங்களில் குடிமகன்கள், மது குடித்து அங்கேயே படுத்து கொள்கிறார்கள். ஊர் நுழைவாயில் முன், பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள இடத்தில் கூட குடிமகன்கள், மது குடித்து தகறாறில் ஈடுபடுகின்றனர்.
பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், இளம்பெண்கள் நடந்து சென்றால் பைக்கில் வரும் மர்ம நபர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டு, தப்பி சென்று விடுகின்றனர்.
இந்த அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண, போலீசார் ரோந்தை அதிகரிக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பிற்கு காலை, மாலை நேரங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில், கண்காணிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

