/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அவிநாசி ரோடு பழைய மேம்பாலத்தின் சுரங்கப்பாதையில் போக்குவரத்து மாற்றம்
/
அவிநாசி ரோடு பழைய மேம்பாலத்தின் சுரங்கப்பாதையில் போக்குவரத்து மாற்றம்
அவிநாசி ரோடு பழைய மேம்பாலத்தின் சுரங்கப்பாதையில் போக்குவரத்து மாற்றம்
அவிநாசி ரோடு பழைய மேம்பாலத்தின் சுரங்கப்பாதையில் போக்குவரத்து மாற்றம்
ADDED : டிச 17, 2025 05:06 AM

கோவை: அவிநாசி ரோடு பழைய மேம்பாலத்தின் சுரங்கப் பாதையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் தொடர்பாக, நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தோம். சுரங்கப் பாதையில் கார்கள் செல்வதை தடை செய்ய வலியுறுத்தப்பட்டது.
மாநகர போக்குவரத்து போலீசார், மேம்பாலத்தின் நான்கு பாதைகளில் வரும் வாகனங்கள் மற்றும் சுரங்கப் பாதையை பயன்படுத்தும் வாகனங்கள், 'பீக் ஹவர்ஸ்' சமயத்தில் எதனால் நெருக்கடி ஏற்படுகிறது என ஆய்வு செய்தனர். அதைத்தொடர்ந்து, சுரங்கப்பாதையில் வாகனங்கள் செல்வதற்கு சில மாற்று ஏற்பாடுகளை செய்திருக்கின்றனர்.
* உப்பிலிபாளையத்தில் இருந்து சுரங்கப்பாதையில் வரும் வாகன ஓட்டிகள், மில் ரோடு மற்றும் கூட்ஸ் ஷெட் ரோட்டுக்கு நேராகச் செல்லலாம். வலது புறம் திரும்பி ப்ரூக் பீல்ட்ஸ் ரோட்டுக்கும் செல்லலாம். எதிர் திசையில் வாகனங்கள் வராத அளவுக்கு மில் ரோடு மற்றும் கூட்ஸ் ஷெட் ரோடு வழியில் உள்ள சுரங்கப்பாதையை பயன்படுத்த முடியாத அளவுக்கு டிவைடர்கள் வைத்து மறிக்கப்பட்டுள்ளன.
* கூட்ஸ் ஷெட் ரோடு மற்றும் மில் ரோட்டில் இருந்து வரும் வாகன ஓட்டிகள், மேம்பாலத்தை மட்டுமே பயன்படுத்த முடியும்; சுரங்கப்பாதை வழியாக செல்ல முடியாது.
* ப்ரூக் பீல்ட்ஸ் ரோட்டில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் இடதுபுறம் திரும்பி, அவிநாசி ரோட்டுக்குச் செல்லலாம். மில் ரோடு, கூட்ஸ் ஷெட் ரோடு செல்ல வேண்டுமெனில், அரசு போக்குவரத்து கழக பணிமனை வரை சென்று, 'யூ டேர்ன்' அடித்து, திரும்பி வர வேண்டும்.
போலீசார் இல்லாத நேரத்தில், டிவைடர்கள் இருக்கும் பகுதி வரை மட்டும் சென்று 'யூ டேர்ன்' அடிக்கின்றனர். அதனால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அதை தவிர்க்க போக்குவரத்து கழக பணிமனை வரை டிவைடர் வைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு உள்ளது.
இத்தகைய மாற்றம் காரணமாக, அவிநாசி ரோடு பழைய மேம்பாலத்தை பயன்படுத்தும் வாகனங்கள் இரு பாதைகளிலும் பிரிந்து செல்வதால், போக்குவரத்து நெருக்கடி ஓரளவுக்கு சமாளிக்கப்படுகிறது.
பரீட்சார்த்த முறையில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. போக்குவரத்து சீரானால், இதே நடைமுறை பின்பற்றப்படுமென போலீசார் தெரிவித்தனர்.

