/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ் ஸ்டாண்டில் பொறுப்பாளர் இல்லாததால் 'டைமிங்' பிரச்னை! புறப்படும் நேரத்தில் காத்திருப்பதால் சிக்கல்
/
பஸ் ஸ்டாண்டில் பொறுப்பாளர் இல்லாததால் 'டைமிங்' பிரச்னை! புறப்படும் நேரத்தில் காத்திருப்பதால் சிக்கல்
பஸ் ஸ்டாண்டில் பொறுப்பாளர் இல்லாததால் 'டைமிங்' பிரச்னை! புறப்படும் நேரத்தில் காத்திருப்பதால் சிக்கல்
பஸ் ஸ்டாண்டில் பொறுப்பாளர் இல்லாததால் 'டைமிங்' பிரச்னை! புறப்படும் நேரத்தில் காத்திருப்பதால் சிக்கல்
ADDED : ஜூன் 12, 2024 10:11 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி பழைய மற்றும் புது பஸ் ஸ்டாண்டில், பொறுப்பாளர் பணியிடம் காலியாகவே உள்ளதால், அரசு மற்றும் தனியார் பஸ்கள், புறப்படும் நேரத்தில், பிரச்னை ஏற்படுகிறது.
பொள்ளாச்சி பழைய மற்றும் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, 200க்கும் மேற்பட்ட அரசு போக்குவரத்து கழகத்தின் பஸ்கள், தொலைதுாரத்துக்கும், உள்ளூர் போக்குவரத்துக்கு டவுன் பஸ்களும் இயக்கப்படுகின்றன.
அதேபோல, 30க்கும் மேற்பட்ட தனியார் பஸ்களும் இயக்கப்படுகின்றன. இது ஒருபுறமிருக்க, பிற ஊர்களில் இருந்தும், பஸ் ஸ்டாண்ட்மார்க்கமாக, அதிகப்படியான அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
ஆனால், பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் புறப்படும் நேரம் குறித்த கால அட்டவணை முழுமையாக கிடையாது. கோவை, திருப்பூர், உடுமலை, பாலக்காடு, வால்பாறை வழித்தடங்களுக்கான பிரிவுகள் இருந்தும், இரு நேர காப்பாளர்கள்மட்டுமே பணிபுரிகின்றனர். அதாவது, சுழற்சிமுறையில், ஒருவர் மட்டுமே தினமும் பணியில் நீடிக்கிறார்.
இதனால், அரசு மற்றும் தனியார் பஸ்கள், புறப்படும் நேரத்தில், பிரச்னை ஏற்படுகிறது. டிரைவர், கண்டக்டர்கள் இடையே வாக்குவாதம் அதிகரிக்கிறது. குறிப்பாக, தனியார் பஸ்களுக்கு, முன்னுரிமை அளித்து, புறப்படச் செய்வதாகவும் புகார் எழுகிறது.
இதற்கு, பஸ் ஸ்டாண்ட் பொறுப்பாளர்இல்லாததும் ஒரு காரணம் என, அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
அரசு பஸ் ஊழியர்கள் கூறியதாவது:
பஸ் ஸ்டாண்டில், பஸ்களை ஒழுங்குபடுத்தவும், பயணியருக்கு பஸ் புறப்படும் நேரம் குறித்து தகவல் தெரிவிக்கவும் பஸ் ஸ்டாண்ட் பொறுப்பாளர் நியமிக்கப்படுகின்றனர். இவரின் மேற்பார்வையிலேயே நேர காப்பாளர்கள் பணியில் இருப்பர். இவர்களுக்கான அறையும் பஸ் ஸ்டாண்டில் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இப்பணியிடம் பல மாதங்களாகவே காலியாக உள்ளது. இதனால், பழைய மற்றும் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்படும் பஸ்களின் இயக்கம் முறையாக இருப்பதும் கிடையாது.
இதில், தனியார் பஸ்கள், குறித்த நேரத்தில் இயக்கப்படாமல், முன் கூட்டியே புறப்பட்டுச் செல்லவும், இருக்கைகள் நிரம்பும் வரை தாமதமாக கிளம்பவும் அனுமதிக்கப்படுகிறது.
அதேநேரம், அரசுபஸ்கள் புறப்படுவதற்கு, குறைந்த நேர இடைவெளி மட்டுமே அளிப்பதால், வருவாய் பாதிக்கிறது. இதேபோல,பயணியர், பஸ்கள் புறப்படும் நேரம் குறித்த விபரங்களை பெற முடியாமல், பெரிதும் அவதிப்படுகின்றனர்.
எனவே, பயணியர் நலன் கருதி, பஸ் ஸ்டாண்ட் பொறுப்பாளர் பணியிடத்தை நிரப்புவதுடன், போதுமான எண்ணிக்கையில் நேர காப்பாளர்களையும் நியமனம் செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
அடிக்கடி மோதல்!
பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில், குறிப்பாக, கோவை பஸ்கள் நிறுத்தும் பகுதியில் அடிக்கடி 'டைமிங்' பிரச்னை ஏற்படுகிறது. தனியார் பஸ்கள் குறித்த நேரத்துக்கு கிளம்பாமல், பஸ்கள் வெளியேறும் இடத்தை அடைத்து நிறுத்தப்பட்டு, பயணியரை ஏற்றுகின்றனர்.
இதனால், அடுத்ததாக கிளம்பும் அரசு பஸ்சில் பயணியர் எண்ணிக்கை குறைவதுடன், குறைந்த நேர இடைவெளியே கிடைக்கிறது. இந்த பிரச்னையால், அரசு மற்றும் தனியார் பஸ் ஊழியர்களிடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. அங்கிருக்கும், பஸ் ஊழியர்கள் இருதரப்பினரையும் சமரசம் செய்து, அனுப்பி விடுகின்றனர். இந்த பிரச்னை பெரிதாவதற்குள், 'டைமிங்' பிரச்னையை முறையாக கடைபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

