/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இந்தாண்டு தேங்காய், கொப்பரைக்கான... விலை குறையாது! பொய் தகவலை நம்பி ஏமாற வேண்டாம்
/
இந்தாண்டு தேங்காய், கொப்பரைக்கான... விலை குறையாது! பொய் தகவலை நம்பி ஏமாற வேண்டாம்
இந்தாண்டு தேங்காய், கொப்பரைக்கான... விலை குறையாது! பொய் தகவலை நம்பி ஏமாற வேண்டாம்
இந்தாண்டு தேங்காய், கொப்பரைக்கான... விலை குறையாது! பொய் தகவலை நம்பி ஏமாற வேண்டாம்
ADDED : ஜன 10, 2026 07:14 AM

பொள்ளாச்சி: பொங்கல் பண்டிகை முடிந்ததும், தேங்காய், கொப்பரை விலை உயர வாய்ப்புள்ளது. பொய்யான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என, தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர் நலச்சங்க நிர்வாகி தெரிவித்தார்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், மற்ற சாகுபடிகளை விட தென்னை அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இப்பகுதிகளில், சாகுபடி செய்யப்படும் தேங்காய், கொப்பரை போன்றவை, வடமாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது. கொப்பரை தேங்காய் தரம் பிரிக்கப்பட்டு, விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக, கேரளா வேர்வாடல், வெள்ளை ஈ தாக்கி வருகின்றன. இச்சூழலில் வரத்து குறைவால் தேங்காய், கொப்பரை, எண்ணெய் விலை எதிர்பார்ப்பை விட உயர்ந்து காணப்பட்டது. இதனால், விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.
இந்நிலையில், வடமாநிலத்தில் உறைபனி அதிகம் உள்ளதால் தேங்காய் எண்ணெய் தேவை குறைந்ததால் விலையிலும் மாற்றம் ஏற்பட்டது.தற்போது, சீசன் இல்லாத சூழலில் தேங்காய் எண்ணெய் விலை சரிந்த நிலையில், சிலர் பொய்யான தகவல்களை பரப்பி விலையை குறைக்க முற்படுவதை நம்ப வேண்டாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர் நலச்சங்க பிரதிநிதி தங்கவேலு கூறியதாவது:
தேங்காய் வரத்து குறைந்ததால், கொப்பரை, தேங்காய் எண்ணெய், தேங்காய் விலை வேகமாக உயர்ந்து காணப்பட்டது. உற்பத்தி குறைந்து இருந்த போதும், விலை உயர்வு காரணமாக விவசாயிகள் நிம்மதியடைந்தனர்.
காங்கேயம், ஊத்துக்குளியில் இருந்து தினமும், 500 டன் தேங்காய் எண்ணெய் வடமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டன.இந்நிலையில், வடமாநிலங்களில் பனிப்பொழிவு அதிகம். மேலும், உறைபனி காரணமாக தேங்காய் எண்ணெய் பயன்பாடு முற்றிலும் குறைந்தது.
வடமாநிலத்தில் தேங்காய் எண்ணெய்க்கு மாற்றாக கடுகு எண்ணெய் அதிகளவு பயன்படுத்தியதால், விலை சரிந்தது.தற்போது, கொப்பரை உற்பத்தி இல்லை. வெளி மாநிலத்தினரும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி காரணமாக அவர்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.
இதனால், மார்க்கெட் நிலையாக உள்ளது. இன்று (நேற்று) தேங்காய் எண்ணெய் (15 கிலோ டின்) -- 3,500, தேங்காய் பவுடர் கிலோ - 237, கொப்பரை கிலோ - 175 முதல் 177 வரையும், தேங்காய் சாதா டன் - 56 ஆயிரம் ரூபாய், தேங்காய் ஸ்பெஷல் டன் - 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கிறது.
இன்னும் இரண்டு வாரத்தில் வடமாநிலத்தில் பனிப்பொழிவு குறைய வாய்ப்புள்ளது. அதன் பின், மீண்டும் தேங்காய், கொப்பரை, தேங்காய் எண்ணெய் வடமாநிலத்துக்கு அதிகளவு அனுப்பப்படும்.
கேரளாவில் சீசன் துவங்கினாலும், நோய் தாக்குதல் அதிகமாக உள்ளதால் உற்பத்தி மிக குறைவாகவே உள்ளது. இதனால், தமிழகத்தில் இருந்து அதிகளவு தேங்காய் கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது. தமிழகத்திலும், ஏப். மாதம் தான் சீசன் துவங்கும். எனவே, தேங்காய் உற்பத்தியே இல்லாத சூழலில், விலை குறைய வாய்ப்பு இல்லை. பொங்கல் பண்டிகை முடிந்ததும், மீண்டும் விலை உயர மட்டுமே வாய்ப்புள்ளது.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் பரவும், தேங்காய் சார்ந்த பொருட்கள் விலை சரியும் என்ற பொய்யான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம். இவ்வாறு, அவர் கூறினார்.

