/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிறைய சொன்னாங்க... எதுவும் செய்யலையே! கழிப்பிட கதவு பெயர்ந்து கிடக்குது செப்டிக்டேங்க் துர்நாற்றத்தால் அவதி
/
நிறைய சொன்னாங்க... எதுவும் செய்யலையே! கழிப்பிட கதவு பெயர்ந்து கிடக்குது செப்டிக்டேங்க் துர்நாற்றத்தால் அவதி
நிறைய சொன்னாங்க... எதுவும் செய்யலையே! கழிப்பிட கதவு பெயர்ந்து கிடக்குது செப்டிக்டேங்க் துர்நாற்றத்தால் அவதி
நிறைய சொன்னாங்க... எதுவும் செய்யலையே! கழிப்பிட கதவு பெயர்ந்து கிடக்குது செப்டிக்டேங்க் துர்நாற்றத்தால் அவதி
ADDED : பிப் 07, 2024 11:06 PM

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட, 22வது வார்டில் நந்தனார் காலனி, பி.எம்.சி., காலனி உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இப்பகுதியில், 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
அதில், தற்காலிக மற்றும் நிரந்தர துாய்மை பணியாளர்கள், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகளவு வசிக்கின்றனர்.நகரின் துாய்மையை காக்கும் பணியில் அர்ப்பணிப்போடு ஈடுபடும் பணியாளர்கள் வசிக்கும் இப்பகுதியில், அடிப்படை வசதிகள் கூட மேம்படுத்தப்படாமல் உள்ளதாக குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர்.
நந்தனார் காலனி குடியிருப்பு பகுதி மக்கள் கூறியதாவது:
நந்தனார் காலனியில் வசிப்போருக்கு பொதுக்கழிப்பிடங்கள் கட்டப்பட்டன. ஆண்கள், பெண்கள் என தனித்தனியாகவும், குழந்தைகளுக்கு தனியாகவும், மாற்றுத்திறனாளிக்கு என கழிப்பிடங்கள் மற்றும் குளியல் அறைகளும் கட்டப்பட்டன.
ஆனால், அவை போதிய பராமரிப்பின்றி கிடக்கின்றன. கதவுகள் பெயர்ந்து கிடப்பதால் பெண்கள் பயன்படுத்த தயங்குகின்றனர். வேறு வழியில்லாததால் இதை பயன்படுத்தும் அவல நிலை உள்ளது.
மேலும், கழிப்பிடத்தில் உள்ள பேசின்களும் பெயர்ந்து, எப்போது வேண்டுமென்றாலும் உள்ளே செல்லும் நிலையில் உள்ளன. செப்டிக் டேங்க் பராமரிப்பின்றி சிதிலமடைந்து கிடக்கிறது.
அதில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதுடன், காஸ் பரவுவதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், தொற்று நோய்கள் பரவுகின்றன. கழிப்பிடங்களை பராமரிக்க நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை.
இந்த கழிப்பிடங்கள் அருகே, குழந்தைகள் கல்வி பயிலும் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. கடும் துர்நாற்றம் வீசுவதால் குழந்தைகள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.
இந்த மையத்தை இடமாற்றம் செய்ய கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. நந்தனார் காலனியில் சாக்கடை கால்வாய்கள் பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல், கழிவு நீர் தேங்கி நின்று கொசு உற்பத்தி மையமாக மாறியுள்ளது.
நகராட்சி துாய்மை பணியாளர்களுக்கான குடியிருப்புக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது, இங்கு தற்காலிக மற்றும் ஓய்வு பெற்ற துாய்மை பணியாளர்கள் குடும்பத்துடன் வசிக்கின்றனர்.
இந்த இடத்தை, இங்கு வசிப்போருக்கே கொடுக்கலாம் என, நகராட்சியில் சில ஆண்டுகளுக்கு முன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இன்னும் வழங்கவில்லை. இதனால், மின் இணைப்பு இல்லாமல் பல வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. தற்காலிக மின் இணைப்பு வழங்க கோரிக்கை விடுத்தால் மின்வாரியம், நகராட்சியின் தடையின்மை சான்று வேண்டுமென கேட்கிறது.
ஆனால், நகராட்சி நிர்வாகம் அனுமதி கடிதம் தரவில்லை. இதனால், மின் இணைப்பு கிடைக்காமல் பள்ளி, கல்லுாரி பயிலும் மாணவர்கள் தெருவிளக்கில் அமர்ந்து படிக்கும் சூழல் உள்ளது.
தற்போது, நான்கு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதுவும் பற்றாக்குறையாக உள்ளது. முறையாக குப்பை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கும் தீர்வு காணப்படவில்லை.
இங்கு வசிப்போருக்கு பட்டா வழங்கப்படும்; வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு, தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என, தேர்தலுக்கு தேர்தல் வாக்குறுதி கொடுக்கின்றனர். பல தேர்தல்கள் பார்த்து விட்டோம், கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
பொள்ளாச்சி நகரில் துாய்மை பணி மேற்கொள்வோர் வசிக்கும் இப்பகுதியில், எவ்வித அடிப்படை வசதியும் இல்லை. எங்களது பிரச்னைகளுக்கு தீர்வு காண நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது வேதனையளிக்கிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

