/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தவறாமல் மக்களை வாக்களிக்க சொன்னார்கள்... நுாறு சதவீதம் !தவறில்லாத வாக்காளர் பட்டியல் தர மறந்தார்கள்!
/
தவறாமல் மக்களை வாக்களிக்க சொன்னார்கள்... நுாறு சதவீதம் !தவறில்லாத வாக்காளர் பட்டியல் தர மறந்தார்கள்!
தவறாமல் மக்களை வாக்களிக்க சொன்னார்கள்... நுாறு சதவீதம் !தவறில்லாத வாக்காளர் பட்டியல் தர மறந்தார்கள்!
தவறாமல் மக்களை வாக்களிக்க சொன்னார்கள்... நுாறு சதவீதம் !தவறில்லாத வாக்காளர் பட்டியல் தர மறந்தார்கள்!
ADDED : ஏப் 20, 2024 12:56 AM

கோவை;கோவை லோக்சபா தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில், பலரது பெயர்கள் விடுபட்டு இருந்தன; வாக்காளர்கள் பலரும் தவிப்புக்கு உள்ளாகினர். நுாறு சதவீதம் ஓட்டுப்போட வலியுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட தேர்தல் ஆணையம், நுாறு சதவீதம் தவறில்லாத வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில் கோட்டை விட்டு முழிக்கிறது.
கோவை லோக்சபா தொகுதியில், 21 லட்சத்து, 6 ஆயிரத்து, 124 வாக்காளர்களின் பெயர்கள், பட்டியலில் இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஓட்டுச்சாவடிக்கு சென்ற வாக்காளர்கள் பலருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.
வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்த போதிலும், அவர்களது பெயர் பட்டியலில் இல்லாமல் இருந்தது. வாக்காளர் பட்டியல் தயாரித்தபோது, ஒருவருக்கே இரண்டு இடங்களில் ஓட்டுரிமை இருந்தால், அவரிடம் விளக்கம் கேட்டு, ஏதேனும் ஒரு இடத்தில் பெயர் நீக்கப்படும் என தேர்தல் அலுவலர்கள் கூறியிருந்தனர்.
அதன்படி, வாக்காளர்களுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்காமலேயே, பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன. இதேபோல், முகவரி மாறிச் சென்றவர்களின் பெயர்களும், அவர்களது அனுமதி பெறாமல் நீக்கப்பட்டிருக்கின்றன.
முகவரி மாறிச் சென்றவர்கள், இதற்கு முன் ஓட்டுப்பதிவு செய்த ஓட்டுச்சாவடிக்கு வந்து பட்டியலில் பெயர் இருக்கிறதா என தேடிப்பார்த்தனர். பெயர் நீக்கப்பட்டு இருந்ததால், அவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
வாக்காளர் அடையாள அட்டை இருந்தும், பட்டியலில் பெயர் இல்லாத ஒரே காரணத்துக்காக, ஓட்டு செலுத்த முடியாத நெருக்கடிக்கு உள்ளாகினர்.
இது, வாக்காளர் பட்டியல் தயாரித்த, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களின் தவறு. அவர்கள் செய்த தவறுக்கு, நேற்றைய தினம் வாக்காளர்கள் ஓட்டுப்போட முடியாமல், அதிருப்தி அடைந்தனர்.
100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்ட தேர்தல் ஆணையம், பல இடங்களில் இறந்தவர்களின் பெயர்களை நீக்கத் தவறி விட்டது. இம்முறை பயன்படுத்தும் வாக்காளர் பட்டியலில், தவறுகள் அதிகமாக இருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
இனியாவது, 100 சதவீதம் தவறில்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்க, தேர்தல் ஆணையம் முனைப்பு காட்ட வேண்டும். இதற்கு, ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பதை, கட்டாயமாக்க வேண்டும்.
அவ்வாறு கட்டாயப்படுத்தினால், ஒரு வாக்காளருக்கு ஒரு இடத்தில் மட்டுமே ஓட்டுரிமை இருக்கும். அது, எந்த ஓட்டுச்சாவடியில் இருக்கிறது என்பதை தெளிவாக அறியலாம்.
இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, 100 சதவீதம் தவறில்லாத வாக்காளர் பட்டியல் பயன்பாட்டுக்கு வந்தால் மட்டுமே, ஓட்டுப்பதிவு சதவீதம் இன்னும் அதிகரிக்கும். இல்லையெனில், ஒவ்வொரு தேர்தலுக்கும் குழப்பங்கள் வந்து கொண்டே இருக்கும்.

