ADDED : பிப் 24, 2026 05:12 AM

பெ.நா.பாளையம்: 'கவுண்டம்பாளையம் தொகுதியில் அடிப்படை பிரச்னைகளை தீர்ப்பதே, எனது முதல் கடமை' என, நாம் தமிழர் கட்சியின் கவுண்டம்பாளையம் வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் கூறினார்.
இவர் கடந்த, 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் கவுண்டம்பாளையம் தொகுதியில், கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். கோவை லோக்சபா 2024 தேர்தலில் கட்சி சார்பாக போட்டியிட்டவர்.
தற்போது, நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிடுகிறார். இளங்கலை உணவு மற்றும் ஊட்டசத்து துறையில் பட்டம் பெற்ற இவர் கூறியதாவது:
கவுண்டம்பாளையம் தொகுதியில் மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்ப்பதே எனது முதல் கடமை.
மருத்துவம், கல்வி, சுகாதாரம் ஆகியவை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவதே எங்களுடைய கட்சியின் முதல் கொள்கை. தவிர, சாலை வசதி, மின்சாரம், தெருவிளக்கு உள்ளிட்ட மக்களின் அனைத்து அடிப்படை பிரச்னைகளையும் தீர்க்க வேண்டும். இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எங்களுடைய கட்சி மேற்கொள்ளும். இதை முன் வைத்தே எங்களுடைய தேர்தல் பிரச்சார யுத்தி அமையும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
