/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சுய சார்பு பாரதம்' உருவாக்க பாடுபடுங்கள்! இளைஞர்களுக்கு மத்திய இணை அமைச்சர் அழைப்பு
/
'சுய சார்பு பாரதம்' உருவாக்க பாடுபடுங்கள்! இளைஞர்களுக்கு மத்திய இணை அமைச்சர் அழைப்பு
'சுய சார்பு பாரதம்' உருவாக்க பாடுபடுங்கள்! இளைஞர்களுக்கு மத்திய இணை அமைச்சர் அழைப்பு
'சுய சார்பு பாரதம்' உருவாக்க பாடுபடுங்கள்! இளைஞர்களுக்கு மத்திய இணை அமைச்சர் அழைப்பு
ADDED : பிப் 24, 2024 01:46 AM

பெ.நா.பாளையம்:''சுயசார்பு பாரதத்தை உருவாக்க, இளைஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்,'' என, மத்திய இணை அமைச்சர் முருகன் பேசினார்.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே, 'யுனைடெட்' கல்வி நிறுவனத்தில், 'சுதேசி ஜாக்ரன் மஞ்ச்' அமைப்பு சார்பில், இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கு நடந்தது.
இதில், மத்திய இணை அமைச்சர் முருகன் பேசியதாவது:
தன்னிறைவு பெற்ற பாரதத்திற்கான மாணவர்களை உருவாக்கவும், தொழில்துறை விரும்பும் வகையில் கலாசாரத்தை பாதுகாக்கவும், புதிய கல்விக் கொள்கை, 2020ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில், தாய் மொழி கல்வி, தொழில்நுட்ப அறிவு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இதற்காக மத்திய அரசின் சார்பில், 'அடல் இன்குபேஷன்' மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
நாம் ராணுவ தளவாட உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வந்தோம். இப்போது, உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து, பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம்.
விண்வெளி ஆராய்ச்சியில் முன்னோடியாக இந்தியா திகழ்கிறது. வெறும், 653 கோடி ரூபாய் செலவில் சந்திரயான் விண்கலத்தை உருவாக்கி, சாதனை படைத்துள்ளோம். இதில், பெண் விஞ்ஞானிகளின் பங்கும் முக்கியமானது.
பிரதமரின் கனவு
கொரோனா பெருந்தொற்றுக்கு உள்நாட்டிலேயே கோடிக்கணக்கான எண்ணிக்கையில் தடுப்பூசியை தயாரித்து, மற்ற நாடுகளுக்கும் இலவசமாக வழங்கினோம். விஸ்வகர்மா திட்டத்தின் வாயிலாக கைவினை கலைஞர்களை ஊக்குவித்து, சுய சார்பு இந்தியாவை உருவாக்கும் முனைப்பில், பிரதமர் செயல்பட்டு வருகிறார்.
இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்ற, 'ஸ்டாண்ட் அப் இந்தியா', 'ஸ்டார்ட் அப் இந்தியா' திட்டங்கள் துவக்கப்பட்டுள்ளன. பிரதமரின் கனவான, 2047ம் ஆண்டில் இந்தியாவை வளர்ந்து நாடாக உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு மிகவும் முக்கியம்.
இவ்வாறு, அவர் பேசினார். விழாவில், சுதேசி ஜாக்ரான் மஞ்ச் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சுந்தரம், யுனைடெட் கல்வி நிறுவனங்களின் தலைவர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

