/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழையால் பட்டுக்கூடு உற்பத்தி பாதிப்பு; கர்நாடகாவில் நல்ல விலை; தமிழகத்தில் இல்லை
/
மழையால் பட்டுக்கூடு உற்பத்தி பாதிப்பு; கர்நாடகாவில் நல்ல விலை; தமிழகத்தில் இல்லை
மழையால் பட்டுக்கூடு உற்பத்தி பாதிப்பு; கர்நாடகாவில் நல்ல விலை; தமிழகத்தில் இல்லை
மழையால் பட்டுக்கூடு உற்பத்தி பாதிப்பு; கர்நாடகாவில் நல்ல விலை; தமிழகத்தில் இல்லை
ADDED : அக் 23, 2024 05:26 AM

கோவை : வடகிழக்கு பருவமழை காரணமாக, பட்டுக்கூடு உற்பத்தி குறைந்துள்ளது.
கோவை பாலசுந்தரம் ரோட்டில் பட்டு வளர்ச்சித்துறையின் பட்டுக்கூடு விற்பனை அங்காடி உள்ளது. இங்கு கோவை, திருப்பூர், ஈரோடு, கோபி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் பட்டுக்கூடுகளை கொண்டு வந்து, விற்பனை செய்து வருகின்றனர்.
கோவை பட்டு அங்காடிக்கு மாதம், 25 முதல் 30 டன் வரை பட்டுக்கூடு விற்பனைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம். மழைக்காலம் துவங்கியதில் இந்த அளவு குறைந்துள்ளது.
பல்லடம் வாவிப்பளையத்தை சேர்ந்த பட்டு விவசாயி தண்டபாணி கூறுகையில், ''பொதுவாக மழைக் காலங்களில் பட்டுக்கூடு உற்பத்தி அதிகம் இருக்காது. கூடு தரம் இருக்காது என, மழை ஈரத்தில் கூடு போடுவதை, குறைத்துக் கொள்வோம்.
இதை காரணம் காட்டி, பட்டு நுால் உற்பத்தியாளர்கள் குறைந்த விலைக்கு ஏலம் கேட்பது வழக்கமாக உள்ளது. ஆனால் இப்போது கர்நாடகா மார்க்கெட்டில், பட்டுக்கூடுக்கு நல்ல விலை கிடைக்கிறது. இங்கு விலை குறைவாக போகிறது,'' என்றார்.
அவிநாசியை சேர்ந்த பட்டு நுால் உற்பத்தியாளர் தவுகிர் பாஷா கூறுகையில் ''மழைக் காலத்தில் வாங்கும் பட்டுக்கூட்டில், நுால் சரியாக வராது, தரமும் இருக்காது. குறைந்த விலைக்கு வாங்கினாலும் இந்த கூட்டில் லாபம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது.
தரமான பட்டு நுால் கிலோ, 4,300 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. மழைக்காலத்தில் வாங்கும் கூட்டில் எடுக்கப்படும் நுாலுக்கு, இந்த விலை கிடைக்காது,'' என்றார்.
பட்டு அங்காடி அதிகாரிகள் கூறுகையில், 'கடந்த வாரம் பட்டுக்கூடுக்கு நல்ல விலை கிடைத்தது. தரமான கூடு கிலோ 600 ரூபாயக்கும், அடுத்த தரம் 550 ரூபாய்க்கும் விற்பனையானது.
'இந்த வாரம் மழை காரணமாக முதல் தரம் கிலோ 515 ரூபாய்க்கும், அடுத்த தரம் 235 ரூபாய்க்கும் விற்பனையானது. இன்னும் இரண்டு மாதங்களுக்கு, விலை அதிகரிக்க வாய்ப்பில்லை' என்றனர்.

