/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நியமன உறுப்பினராக மாற்றுத்திறனாளிகள் பதவியேற்பு
/
நியமன உறுப்பினராக மாற்றுத்திறனாளிகள் பதவியேற்பு
ADDED : நவ 28, 2025 04:50 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியில், நியமன உறுப்பினராக மாற்றுத்திறனாளி முருகானந்தம் பொறுப்பேற்றுக்கொண்டார்.
நகர்புற உள்ளாட்சி மன்றங்களில், மாற்றுத்திறனாளி உறுப்பினர் நியமனம் செய்ய தமிழக முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி, பொள்ளாச்சி நகராட்சியில், நியமன உறுப்பினராக பொள்ளாச்சியை சேர்ந்த மாற்றுத்திறனாளி முருகானந்தம் நியமிக்கப்பட்டு, நகராட்சி நிர்வாக இயக்குனர் வாயிலாக நியமன சான்று வழங்கப்பட்டது.
இதையடுத்து, நேற்று முருகானந்தம் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நகராட்சி கமிஷனர் குமரன், பதவி பிரமானம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில், நகராட்சி தலைவர் சியாமளா, துணை தலைவர் கவுதமன், கவுன்சிலர்கள், நகர பொறுப்பாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
நகராட்சி நியமன உறுப்பினராக பொறுப்பேற்ற முருகானந்தம் கூறுகையில், ''ஊனமுற்றோரை, மாற்றுத்திறனாளி என அழைக்க வேண்டும் என மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். தற்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகார பகிர்வு வழங்க வேண்டுமென, முதல்வர் ஸ்டாலின், நியமன உறுப்பினராக நியமிக்க உத்தரவிட்டார். இது எங்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறது,'' என்றார்.
வால்பாறை வால்பாறை நகராட்சியில் நியமன உறுப்பினர் பதவி ஏற்பு விழா நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமையில் நடந்தது. நகராட்சி துணைத்தலைவர் செந்தில்குமார், பொறியாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் புதிய நியமன உறுப்பினர் அம்பிகாவுக்கு, நகராட்சி கமிஷனர் (பொ) குமரன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். நகராட்சி நிர்வாக இயக்குனர் வழங்கிய நியமன சான்றும் வழங்கப்பட்டது. நகராட்சி கவுன்சிலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

