/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் கடை கேட்டு... அலையாய் அலைகின்றனர் மக்கள்
/
ரேஷன் கடை கேட்டு... அலையாய் அலைகின்றனர் மக்கள்
UPDATED : டிச 22, 2025 06:31 AM
ADDED : டிச 22, 2025 05:45 AM

மா நகராட்சி மத்திய மண்டலம், 48வது வார்டானது ஜவுளிக் கடைகள், தொழில் நிறுவனங்கள் என, மக்கள் தொகை அதிகம் நடமாட்டமுள்ள பகுதியாகவும், போக்குவரத்து நெரிசல் மிக்கதாகவும் உள்ளது. காந்திபுரம் 4-7 வீதி, அலமு நகர், புதியவர் நகர், அண்ணா நகர், ஜவஹர் நகர், பி.கே.ஆர்., நகர் பகுதிகளில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
பி.கே.ஆர்.நகரில் இருந்து, ராமகிருஷ்ணா மருத்துவமனை செல்லும் வழியில், சங்கனுார் கால்வாய் கடந்து செல்கிறது. இப்பகுதியை ஒட்டி வசிப்பவர்கள், குப்பையை நீர் நிலையில் கொட்டுவது, அடைப்புக்கு வழிவகுக்கிறது. அடித்தட்டு, நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதிகளில் நுாலகம், ரேஷன் கடை அமைத்துத்தர வேண்டும் என்பது, முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக உள்ளது.
பராமரிப்பு தேவை!
2020ம் ஆண்டு ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ஹரிபுரத்தில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. இதுவரை ஒரு நிகழ்ச்சிகூட நடத்தப்படவில்லை. உள்ளே மின் விசிறிகள் உடைந்து காணப்படுகின்றன. மொட்டை மாடியில் 'குடி'மகன்களின் அட்டகாசம் உள்ளது. அருகே பட்டத்தரசி அம்மன் கோவிலில் திருமணம், காதுகுத்து போன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். சமுதாய கூடத்தை பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
-ரவி, சுயதொழில்.
பூங்கா இடம் மருத்துவ தேவைக்காக
காந்திபுரம், 8வது வீதியில் உள்ள நலவாழ்வு மையத்துக்கு செல்கிறோம். ஹரிபுரத்தில் உள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவில், ஊஞ்சல் உள்ளிட்ட உபகரணங்கள் உடைந்துள்ளன. யாரும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இப்பகுதியில் நுாலகம், ரேஷன் கடை, நகர்ப்புற நலவாழ்வு மையம் அமைத்து தர கோரிக்கை விடுத்து வருகிறோம்.
-மல்லிகா, இல்லத்தரசி.
புதிய கழிவறை
காந்திபுரம் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் பின்புறம் சாஸ்திரி நகரில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள பொது கழிப்பிடத்தில் ஆண்கள், பெண்கள் தலா நான்கு பேருக்கு மட்டுமே கழிவறை உள்ளது. அதுவும் 'வெஸ்டர்ன் டாய்லெட்'. உடைந்து துர்நாற்றம் வீசுகிறது. 'செப்டிக் டேங்க்' சிறியதாக உள்ளதால், நான்கு நாட்களுக்கு ஒரு முறை கழிவுநீர் நிரம்புகிறது. புதிதாக கழிவறை கட்டித்தர வேண்டும். -புஷ்பா, இல்லத்தரசி.
புதர் மண்டிய மயானம்
சத்தி ரோடு மின் மயானம் புற்கள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. மரங்களும் வளர்ந்துள்ளதால் குறிப்பாக மழை காலங்களில், காரியங்கள் செய்ய முடிவதில்லை. மயான பகுதியில் இருக்கும் கட்டடங்களில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. மோசமான நிலையில் உள்ள அக்கட்டடங்களை புனரமைத்து குளியல் அறை, காரியங்கள் செய்வதற்கு பயன்படுத்தலாம்.
-சிவகாமி, இல்லத்தரசி.
பட்டா தேவை
1976ம் ஆண்டு சிலருக்கு பட்டா வழங்கப்பட்டது. விடுபட்ட, 48 குடும்பங்களுக்கு பட்டா கோரி போராடி வருகிறோம். உங்களுடன் ஸ்டாலின் முகாமில், பட்டா கோரி மனு அளித்தோம். 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்றனர். இதுவரை கிடைக்கவில்லை. 1998ல் கரட்டுமேடு பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதாக இருந்தது. வழங்கவில்லை. அரசு உதவ வேண்டும்.
-புருசோத்தமன், சமூகப்பணி.

