/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.ஏ.பி. கால்வாய் சேதம்: சீரமைக்க வலியுறுத்தல்
/
பி.ஏ.பி. கால்வாய் சேதம்: சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : நவ 04, 2025 09:04 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, பி.ஏ.பி. கால்வாய் தொட்டிபாலத்தின் பக்கவாட்டு சுவர் சேதமடைந்ததை சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையில் இருந்து, பி.ஏ.பி. பாசனத்துக்கு நான்கு மண்டலமாக தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், வடசித்துார் கால்வாயில், நான்காம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. அதில், செட்டிக்காபாளையம் உபகிளை கால்வாய் தொட்டி பாலத்தின் பக்கவாட்டு சுவர் திடீரென நேற்று இடிந்து சரிந்தது. பராமரிப்பு இல்லாததால் சுவர் இடிந்து நீர் விரயமாகிறது.
விவசாயிகள் கூறுகையில், 'அ.தி.மு.க. ஆட்சியில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. உயர்மட்ட கால்வாய் பராமரிக்கப்பட்டதால் நன்றாக உள்ளது. அதில் இருந்து, 100 மீட்டர் தொலைவில் உள்ள தொட்டிபாலம் போதிய பராமரிப்பின்றி பக்கவாட்டு சுவர் இடிந்து சேதமடைந்தது. இதை சீரமைத்து தண்ணீர் விரைவாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தொட்டிபாலம் சேதமடைந்ததையடுத்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்காக பாசனத்துக்கு வழங்கும் நீர் நிறுத்தப்பட்டது. பணிகள் உடனடியாக துவங்கப்படும்,' என்றனர்.

