/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விளை பொருட்களை மதிப்பு கூட்டி விற்றால் அதிக லாபம்
/
விளை பொருட்களை மதிப்பு கூட்டி விற்றால் அதிக லாபம்
ADDED : மார் 12, 2024 12:01 AM
மேட்டுப்பாளையம்:வனப்பகுதியில் கிடைக்கும் விளை பொருட்களை, மதிப்பு கூட்டி விற்பனை செய்தால், அதிக லாபம் கிடைக்கும், என, வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் பாலசுப்ரமணியன் பேசினார்.
மலைவாழ் மக்களின் வாழ்வாதார முன்னேற்ற திட்டத்தின் கீழ், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், சாத்திய பயிர்களின் பயன்பாடு குறித்து, ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாமை, மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கல்லாறு ஆதிவாசி காலனி பகுதியில் நடத்தியது.
முகாமுக்கு வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்து, பயிற்சி முகாமை துவக்கி வைத்து பேசியதாவது:
மேட்டுப்பாளையம் வன கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், சுயவேலை வாய்ப்புக்கான, தொழில் மேம்பாட்டு பயிற்சி மையம் செயல்படுகிறது.
படித்துள்ள ஆதிவாசி மலைவாழ் பெண்கள், கூலி வேலைக்கு செல்வதை தவிர்த்து, வனக்கல்லூரியில் உள்ள சுயதொழில் வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் சேர்ந்து, ஏதாவது பயிற்சி பெற வேண்டும்.
பயிற்சி பெற்ற பின் குழுவாக ஒன்றிணைந்து, சுயதொழில் செய்ய முன் வர வேண்டும். தொழில் செய்வதற்கு தேவையான வசதிகளும், செய்து கொடுக்கப்படும்.
வனப்பகுதியில் கிடைக்கும் விளை பொருட்களை, நீங்கள் கிடைத்த விலைக்கு விற்பனை செய்து வருகிறீர்கள். அந்த பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்தால், அதிக லாபம் கிடைக்கும். விளை பொருட்களை எப்படி மதிப்பு கூட்டி விற்பனை செய்வது குறித்த பயிற்சியும், கல்லூரியில் அளிக்கப்படுகிறது.
அரசு உங்களுக்கு வழங்கும் சலுகைகள் குறித்தும், விபரமாக கூறப்படும். சலுகைகள் முழுமையாக பெற, நீங்கள் பயிற்சி மையத்தில் சேர வேண்டும். இவ்வாறு கல்லூரி முதல்வர் பேசினார்.
நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் வன சரக்கு அலுவலர் ஜோசப் ஸ்டாலின் பேசினார். வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வன மரபியல் மற்றும் மர மேம்பாட்டுத் துறை தலைவர் பேராசிரியர் ரேவதி வரவேற்றார். பேராசிரியர் ரமேஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 50 பேருக்கு மண்வெட்டிகள் வழங்கப்பட்டன. மண்புழு உரம் எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்து, பயிற்சியில் பங்கேற்ற மகளிருக்கு வனக்கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட்டது.

