/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீஸ் ஸ்டேஷனில் துாக்கிட்டு ஒருவர் தற்கொலை
/
போலீஸ் ஸ்டேஷனில் துாக்கிட்டு ஒருவர் தற்கொலை
ADDED : ஆக 06, 2025 10:59 PM

கோவை:கோவை நகர் பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் ஒன்றில், எஸ்.ஐ., அறைக்குள் சென்ற ஒருவர், அங்குள்ள மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை கடை வீதி போலீஸ் ஸ்டேஷனில், சட்டம் - ஒழுங்கு பிரிவு தரைத்தளத்திலும், குற்றப்பிரிவு முதல் தளத்திலும் செயல்படுகின்றன.
நேற்று காலை, 8:00 மணிக்கு, 'ரோல் கால்' முடிந்ததும் போலீஸ்காரர் செந்தில்குமார், குற்றப்பிரிவு எஸ்.ஐ., அறையை திறக்க முயன்றார். கதவு உள்பக்கமாக மூடப்பட்டிருந்தது.
தட்டியும் திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது, உள்ளே மின் விசிறியில் ஒருவர், வேஷ்டியால் துாக்கிட்டு தொங்குவதை பார்த்து, உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
முதல்கட்ட விசாரணை முதல்கட்ட விசாரணையில், துாக்கிட்டு தொங்கிய நிலையில் காணப்பட்டவர், நேற்று முன்தினம் இரவு, 11:19 மணிக்கு கடை வீதி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தவர் என தெரிந்தது.
அங்கிருந்த தலைமை காவலர் செந்தில்குமாரிடம், 'தன்னை, 25க்கும் மேற்பட்டோர் கொலை செய்ய துரத்தி வருகின்றனர்' என கூறியுள்ளார்.
ஸ்டேஷனுக்கு வெளியே வந்து, யாரேனும் துரத்தி வருகின்றனரா என தலைமை காவலர் பார்த்தபோது, யாரும் தென்படவில்லை.
அவரது செயல்பாடு, மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருந்ததால், காலையில் வருமாறு கூறினார். அந்த நேரம் வந்த போன் அழைப்பை ஏற்க, தலைமை காவலர் ஸ்டேஷனுக்குள் சென்றார்.
அப்போது, முதல் மாடியில் உள்ள குற்றப்பிரிவு எஸ்.ஐ., அறைக்குள், யாருக்கும் தெரியாமல் நைசாக சென்ற அந்த நபர், அங்கு கதவை பூட்டி விட்டு, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் நிருபர்களிடம் கூறியதாவது:
கோவை கடை வீதி போலீஸ் ஸ்டேஷன் முதல் தளத்தில் உள்ள எஸ்.ஐ., அறையில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அறிவொளி ராஜன், 60, என்பது தெரிய வந்துள்ளது.
சகோதரி வீரமணி மற்றும் தாயுடன் வசித்த அவருக்கு திருமணம் ஆகவில்லை. கட்டட வேலைக்குச் சென்று வந்தார். அவர் தான், எஸ்.ஐ., அறைக்குள் சென்று, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவத்தை, 'லாக் அப் டெத்' என்று சொல்ல முடியாது. போலீஸ் ஸ்டேஷனில் நடந்த ஒரு தற்கொலை.
இவ்வாறு, அவர் கூறினார்.
போலீசார் இடமாற்றம் போலீஸ் ஸ்டேஷனில், கவனக்குறைவாக பணியாற்றியதால், தலைமை காவலர் செந்தில்குமார், எஸ்.ஐ., நாகராஜ் ஆகிய இருவரும் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

