/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகளிருக்கான திட்டங்களை முன் எடுத்து செல்வோம்: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி
/
மகளிருக்கான திட்டங்களை முன் எடுத்து செல்வோம்: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி
மகளிருக்கான திட்டங்களை முன் எடுத்து செல்வோம்: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி
மகளிருக்கான திட்டங்களை முன் எடுத்து செல்வோம்: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி
ADDED : செப் 13, 2024 06:15 AM

கோவை : ''மத்திய அரசு மகளிருக்கான சுயநிதி திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும்,'' என்று கோவை இந்துஸ்தான் கல்லுாரியில் நடந்த விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
கோவை மக்கள் சேவை மையம் சார்பில், சுயம் நலத் திட்டத்தில், 1,500 மகளிருக்கு இலவச தையல் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களுக்கு இலவசமாக தையல் இயந்திரங்களை நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கி பேசியதாவது:
ஒவ்வொருவருடைய படிப்பு, திறமைகளை விட கிடைக்கும் வாய்ப்பு என்பது மிக முக்கியம். வாய்ப்புகளை எப்போதும் தவற விடக்கூடாது. திறமை, தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் சாதிக்கமுடியும். பிரதமர் மோடி ஏற்படுத்திய மக்கள் நிதி திட்டம் வாயிலாக நாடு முழுக்க, 53 கோடி வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. அதில் பெண்கள் மட்டும், 29.6 கோடி பேர் உள்ளனர். இதில், தமிழகத்தில் 94 லட்சம், கோவையில் 5 லட்சம் பேர் உள்ளது நம் தேசத்துக்கு பெருமை. இந்த வங்கி கணக்குகள் வாயிலாக மகளிர் தொழில் துவங்கி மேம்படலாம்.
பிரதமர் ஆயுள் இன்சூரன்ஸ் திட்டத்தில் கோவையில், 2.63 லட்சம் வங்கி கணக்குகள் உள்ளன. பிரதமர் விபத்து காப்பீடு திட்டத்தில், 7 லட்சம் வங்கி கணக்குகள் உள்ளன. அடல் ஓய்வூதியத் திட்டத்தில், ஒரு லட்சம் பெண்கள் உள்ளனர்.
முத்ரா திட்டத்தில் 15 லட்சம் மகளிர் பயனாளிகளாக உள்ளனர். மகளிர் தொழிற் பயிற்சி வழங்குவதற்கு நாடு முழுக்க, 311 பயிற்சி மையங்கள் உள்ளன. கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசு மகளிர் ஐ.டி.ஐ.யை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
மத்திய அரசு பெண்களுக்கான சுயநிதி திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும், மகளிர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார முறையில் முன்னேற்றம் அடையவும் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் பேசுகையில், ''பெண்களை தொழில் முனைவோராக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் கடந்த மார்ச் 2023ல் இப்பயிற்சியை சுயம் திட்டம் வாயிலாக துவங்கினோம். தற்போது, சொந்தமாக தொழில் துவங்கும் தொழில் முனைவோராக மாற்றப்பட்டிருக்கிறீர்கள். மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு, அரசு அரசிதழில் வெளியிடாததால், மத்திய அரசின் உதவியை பெற்று தர முடியாத நிலையில் உள்ளது. விஸ்வகர்மா திட்டத்தை மாநில அரசு அரசிதழில் வெளியிட வேண்டும்,'' என்றார்.
இவ்விழாவில், ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவன மேலாளர் ஜெயஸ்ரீபாலகிருஷ்ணன், மாவட்ட முன்னோடி வங்கி சீனியர் மேலாளர் ஈஸ்வரமூர்த்தி, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க திறன்மேம்பாட்டுத்துறை தலைவர் சக்திவேல், பா.ஜ.,மாநில பொருளாளர் சேகர், மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

