/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கான கபடி
/
பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கான கபடி
ADDED : பிப் 14, 2024 01:57 AM

கோவை;பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையேயான மாணவியர் கபடி போட்டியில், கோவை அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லுாரி மாணவியர் முதலிடம் பிடித்தனர்.
இன்டர் பாலிடெக்னிக் அதலெடிக் அசோசியேஷன் (ஐ.பி.ஏ.ஏ.,) சார்பில், கோவை மண்டலத்துக்கு உட்பட்ட பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையேயான முதலாம் ஆண்டு மாணவியர் கபடி போட்டி, ஒத்தகால்மண்டபம் இந்துஸ்தான் பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்தது.
இப்போட்டியில், கோவை மண்டலத்துக்கு உட்பட்ட பல்வேறு கல்லுாரி அணிகள் பங்கேற்றன. இதன் முதல் அரையிறுதிப்போட்டியில், ஸ்ரீ ரங்கநாதர் பாலிடெக்னிக் கல்லுாரி அணி 38 - 23 என்ற புள்ளிக்கணக்கில், பி.ஏ., பாலிடெக்னிக் கல்லுாரியையும், இரண்டாம் அரையிறுதியில் அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லுாரி அணி 34 - 30 என்ற புள்ளிக்கணக்கில், நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரியையும் வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
பரபரப்புக்கு பஞ்சமின்றி நடந்த இறுதிப்போட்டியின், ஆட்ட நேர முடிவில் அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லுாரி அணி 35 - 28 என்ற புள்ளிக்கணக்கில், ரங்கநாதர் கல்லுாரி அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது. இதன்மூலம், மாநில அளவிலான போட்டிக்கு அரசு பாலிடெக்னிக் கல்லுாரி அணி தகுதி பெற்றது.
வெற்றி பெற்ற மாணவியருக்கு, இந்துஸ்தான் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் கோகிலவாணி, இந்துஸ்தான் கல்லுாரி சி.இ.ஓ., கருணாகரன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை, கல்லுாரியின் உடற்கல்வித்துறை இயக்குனர் ரவிகுமார் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் வைரமுத்து ஆகியோர் செய்திருந்தனர்.

