/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரைபட அனுமதி வழங்கியதில் முறைகேடு
/
வரைபட அனுமதி வழங்கியதில் முறைகேடு
ADDED : மார் 15, 2024 10:24 PM
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் அருகே சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில், வரன் முறைப்படுத்தப்படாத இடங்களுக்கு கட்டட வரைபட அனுமதி வழங்கிய புகார் தொடர்பாக, சிக்கதாசம்பாளையம் ஊராட்சி தலைவர் விமலா, 7 தினங்களுக்குள் நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும் என கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், கூறப்பட்டுள்ளதாவது :
கோவை மாவட்ட காரமடை ஒன்றியத்திற்கு உட்பட்ட சிக்கதாசம்பாளையம் ஊராட்சி, மலைத்தள மேம்பாட்டு குழுமத்தின் கீழ் வருகிறது. இதனால் மலைத்தள மேம்பாட்டு குழுமத்தின் தடையின்மை சான்று பெற்ற பின்னரே ஊராட்சியால் கட்டட வரைபட அனுமதி வழங்க வேண்டும்.
ஆனால், சிக்கதாசம்பாளையம் ஊராட்சி தலைவர் விமலா எவ்வித விதிமுறைகளையும் பின்பற்றாமல் கட்டட வரைபடம் வழங்கி வருவதாக புகார் வரபெற்று, அதன் அடிப்படையில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) விசாரணை மேற்கொண்டு, ஊராட்சி மன்ற தலைவர் விமலா மீது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் கீழ் அவருக்கு வழங்கப்பட்ட முதல் நிலை கையொப்பமிடும் அதிகாரம் பறிக்கப்பட்டது.
இதனிடையே தற்போதும் ஊராட்சி மன்ற தலைவர் விமலா தொடர்ச்சியாக விதிமுறைகளை மீறி மலைத்தள மேம்பாட்டு குழுமத்தினரால் வரன் முறைப்படுத்தப்படாத இடங்களுக்கு கட்டட வரைபட அனுமதி வழங்கி வருவதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் விசாரணை மேற்கொண்டு, சமர்ப்பித்த அறிக்கையில், சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் 1.4.2022 முதல் 31.3.2023 வரையிலான காலகட்டத்தில் வரன்முறை படுத்தப்படாத 24 மனை பிரிவுகளுக்கும், மேலும் 1.4.2023 முதல் 30.9.2023 வரையிலான காலகட்டத்தில் வரன்முறை படுத்தப்படாத 13 மனை பிரிவுகளுக்கும் கட்டட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளை பின்பற்றாமல் வரைபட அனுமதி வழங்கி வருவது அடிப்படை விசாரணையில் தெரிய வருகிறது. எனவே ஊராட்சித் தலைவர் நேரில் சந்தித்து இது தொடர்பான விளக்கங்களை அவருக்கு கடிதம் கிடைத்த 7 தினங்களுக்குள் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.---

