/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புகை பரிசோதனை மையத்துக்கு 'செக்' புதிய செயலி அறிமுகம்:போலிச் சான்று இனி கிடையாது...
/
புகை பரிசோதனை மையத்துக்கு 'செக்' புதிய செயலி அறிமுகம்:போலிச் சான்று இனி கிடையாது...
புகை பரிசோதனை மையத்துக்கு 'செக்' புதிய செயலி அறிமுகம்:போலிச் சான்று இனி கிடையாது...
புகை பரிசோதனை மையத்துக்கு 'செக்' புதிய செயலி அறிமுகம்:போலிச் சான்று இனி கிடையாது...
ADDED : மே 16, 2024 10:42 PM
பெ.நா.பாளையம்;புதிய செயலி வாயிலாக வாகன புகை பரிசோதனை சான்று வழங்கப்படுவதால், போலி சான்று வழங்க இனி வாய்ப்பில்லை என, வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும், குறிப்பாக சென்னை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில் வாகன புகை அதிகரிப்பால், காற்று மாசுபாடும், பொதுமக்களுக்கு நுரையீரல் தொடர்பான பாதிப்பும், அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மாநில அளவில், 534 வாகன புகை பரிசோதனை மையங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன.
நடவடிக்கை
இதில் சில மையங்களில், வாகனங்களை கொண்டு வராமல் பரிசோதித்தும், அங்கீகரிக்கப்பட்ட நபரிடமிருந்து சான்று பெறாமலும், உரிய பரிசோதனை இன்றியும், சான்று வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.
கடந்த மாதம், மாநில அளவில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், துணை போக்குவரத்து ஆணையர்கள், இணை ஆணையர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், 50 மையங்களில் அங்கீகரிக்கப்பட்ட சோதனை செய்ய வேண்டிய நபர் இன்றி, வேறு நபர்கள் பணியில் இருந்ததும், உரிமம் வழங்கப்பட்ட இடத்தில் இல்லாமல் வேறு இடத்தில் இயங்கியதும், கேமரா பொருத்தப்படாததும், உரிமம் புதுப்பிக்கப்படாமல் இயங்கியதும் தெரியவந்தது. இது தொடர்பாக அந்தந்த புகை பரிசோதனை மையங்கள் மீது போக்குவரத்து துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
வாகன புகை பரிசோதனை மையங்களை மேம்படுத்தவும், புகாரை தவிர்க்க, தொழில் நுட்பங்களை உருவாக்கி, PUCC 2.0 version அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், உரிமையாளரின் தனிப்பட்ட மொபைல் போன் பயன்படுத்தப்படும். இந்த புதிய செயலி நிறுவப்பட்டு, ஜி.பி.எஸ்., வசதியுடன் இயங்கும். அந்த செயலி உள்ள மொபைல் போன், வாகன பரிசோதனை மையத்திலிருந்து, 30 மீட்டருக்குள் மட்டுமே செயல்படும். வாகன பரிசோதனையின் போது, இரண்டு புகைப்படங்கள் எடுக்கப்படும். அதில் வாகன பதிவு எண் மையத்தின் பெயர் பலகையுடன் முழு தோற்றம், அங்கீகரிக்கப்பட்ட சோதனையாளர் போன்றவை படத்தில் இடம்பெறுவர்.
போலி சான்றிதழ் கிடையாது
விதிமுறைகள் முழுமையாக கடைபிடித்தால் மட்டுமே, புகை பரிசோதனை சான்று பதிவிறக்கம் செய்யவும், பிரிண்ட் எடுக்கவும் முடியும். ஜி.பி.எஸ்., கருவி வாயிலாக வாகனம் இருக்கும் இடம் கண்டறியப்படுவதால், வாகனம் கொண்டு வராமல் பரிசோதனை செய்ய முடியாது.
இந்த நடைமுறை கடந்த, 6ம் தேதி முதல் மாநில அளவில் அமலானது. இந்த புதிய முறை, PUCC 2.0 version செயலியை புகை பரிசோதனை மைய உரிமையாளர்கள், அந்தந்த பகுதி வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பெற வேண்டும். இதனால் வாகன புகை பரிசோதனை மையங்களின் வாயிலாக வாகன புகை பரிசோதனை போலி சான்றிதழ் வழங்க முடியாது என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

