/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்ஸ்.,களுக்கு மாதத்தில் இரு முறை விடுமுறை; போலீசாருக்கு வார விடுப்பு வழங்க எதிர்பார்ப்பு
/
இன்ஸ்.,களுக்கு மாதத்தில் இரு முறை விடுமுறை; போலீசாருக்கு வார விடுப்பு வழங்க எதிர்பார்ப்பு
இன்ஸ்.,களுக்கு மாதத்தில் இரு முறை விடுமுறை; போலீசாருக்கு வார விடுப்பு வழங்க எதிர்பார்ப்பு
இன்ஸ்.,களுக்கு மாதத்தில் இரு முறை விடுமுறை; போலீசாருக்கு வார விடுப்பு வழங்க எதிர்பார்ப்பு
ADDED : மே 01, 2025 11:58 PM

கோவை : கோவை மாநகரில் பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு, இரு வாரத்துக்கு ஒருமுறை வீதம் மாதத்துக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால், போலீசாருக்கு, அரசாணைப்படி, வார விடுப்பு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
பாதுகாப்பு பணியில் இரவு பகலாக ஈடுபடும் போலீசார், சில சமயங்களில் வாரத்தில் ஏழு நாட்களும் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பணியின்போது பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாத நிலை ஏற்பட்டு, மன ரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.
இப்பாதிப்புகளால் மன அழுத்தத்தில் இருக்கும் போலீசார், புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் வெளிப்படுத்துகின்றனர்.
வார விடுப்பு மறுப்பு
இதையடுத்து, போலீசாருக்கு விடுப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது. வார விடுப்பு அளிப்பது தொடர்பாக, 2021ல் அரசாணை வெளியிடப்பட்டது. இருந்தாலும், போலீஸ் பற்றாக்குறையை காரணம் காட்டி, கோவையில் அமல்படுத்தவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்கும் போலீசார், துறை ரீதியாக பல சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
தற்போதுள்ள சூழலில், கோவை மாநகர பகுதிகளில் பணியாற்றும் ஏட்டு வரையிலான பதவியில் உள்ள போலீசாருக்கு இரு வாரத்துக்கு ஒருமுறை வார விடுப்பு அளிக்கப்படுகிறது. ஆள் பற்றாக்குறை காரணமாக, வாரம் ஒரு விடுப்பு வழங்க முடிவதில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனினும், இரு வாரங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் விடுமுறையை, தொடர்ந்து முறையாக வழங்க வேண்டும் என்பதே, பல போலீசாரின் கோரிக்கையாக உள்ளது.
இன்ஸ்.,களுக்கு விடுப்பு
கோவை மாநகரில், 24 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. சட்டம் - ஒழுங்கு, குற்றப்புலனாய்வு பிரிவில், 35க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள், உடல்நிலையை கவனித்துக்கொள்ள, மன அழுத்தத்தில் இருந்து மீள, குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிட உதவியாக இருக்கும் வகையில், இரு வாரத்துக்கு ஒரு முறை (ஒரு வாரம் சனிக்கிழமை, ஒரு வாரம் ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை அளிக்க, போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் உத்தரவிட்டுள்ளார். இதனால், இன்ஸ்பெக்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
போலீஸ்காரர் ஒருவர் கூறுகையில், 'மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில், கோவையில் போலீசாரின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பணிச்சுமையால், பல போலீசார் மன அழுத்தத்தில் உள்ளனர். இரு வாரங்களுக்கு ஒரு முறை விடுமுறை கொடுப்பது ஆறுதலாக உள்ளது. வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்க ஏற்பாடு செய்தால், மன அழுத்தமின்றி, மேலும் ஆற்றலுடன் பணியாற்ற முடியும்' என்றார்.
போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'கோவையில் போலீசாருக்கு வேலை அதிகம். வி.ஐ.பி.,கள் வருகை, தினசரி குற்றச்செயல்கள், ஆர்ப்பாட்டம், போராட்டம் என 'பிஸி'யாக இருக்கும் இடம். ஆள் பற்றாக்குறை காரணமாக, வாரம் ஒரு நாள் விடுமுறை அளிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
தனிப்பட்ட காரணங்களுக்காக, விடுமுறை கேட்கும் போலீசாருக்கு அளிக்கப்படுகிறது. இன்ஸ்பெக்டர்களுக்கு விடுப்பு அளிக்கும் திட்டத்தால், அவர்கள் குடும்பத்துடன் நேரம் செலவிட முடியும்' என்றார்.

