/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரெக்ரியேஷன் கிளப் பெயரில் பார்கள் அதிகரிப்பு
/
ரெக்ரியேஷன் கிளப் பெயரில் பார்கள் அதிகரிப்பு
ADDED : பிப் 18, 2024 10:39 PM

கோவில்பாளையம்:அன்னுார் தாலுகாவில், தினமும் 12 மணி நேரம் மது விற்பனை செய்யும் ரெக்ரியேஷன் கிளப்கள் அதிகரித்துள்ளன.
அன்னுார் தாலுகாவில், அன்னுார், காக்காபாளையம், கணேசபுரம், தேவம்பாளையம், கோவில் பாளையம், குரும்பபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 10 டாஸ்மாக் மதுக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகள் மதியம் 12:00 மணிக்கு துவங்கி இரவு 10:00 மணி வரை என தினமும் 10 மணி நேரம் மது விற்பனை செய்து வருகின்றன.
இந்நிலையில், தினமும் 12 மணி நேரம் மது விற்பனையும், மது அருந்த அனுமதிக்கும், ரெக்ரியேஷன் கிளப்கள் அதிகரித்து வருகின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அன்னுாரில் கோவை சாலையில் ரெக்ரியேஷன் கிளப் என்கிற பெயரில் எப்.எல். 2 உரிமம் பெற்ற பார் துவக்கப்பட்டது. இந்த பாரில் காலை 11:00 மணிக்கு தொடங்கி இரவு 11:00 மணி வரை மது விற்பனை நடக்கிறது. மது அருந்த அனுமதிக்கின்றனர். உணவுப் பொருட்கள் விற்பனை செய்கின்றனர். இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு அன்னுாரில், அவிநாசி சாலையில், மற்றொரு ரெக்ரியேஷன் கிளப் துவக்கப்பட்டது. டாஸ்மாக் கடையில் விற்பனையாகும் அதே விலையில் இங்கு இலவசமாக ஸ்நாக்சும் தருவதால் கூட்டம் அள்ளுகிறது. இந்நிலையில் கடந்த வாரம், வெள்ளமடை ஊராட்சி, காளிபாளையத்தில், மேலும் ஒரு ரெக்ரியேஷன் கிளப் துவக்கப்பட்டுள்ளது. இங்கும் 12 மணி நேரம் மது விற்பனை நடக்கிறது. மது அருந்த அனுமதிக்கின்றனர்.
தமிழக அரசு, டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்கிறோம் என, உயர் நீதிமன்றத்திலும், பொதுக்கூட்டங்களிலும் கூறி வருகிறது. ஆனால் அதற்கு பதில் ஆண்டுக்கு சில லட்சம் ரூபாய் லைசன்ஸ் கட்டணம் செலுத்தும் எப்.எல். 2 பார்களை அதிக அளவில் திறக்க அனுமதித்து வருகிறது.
மேலும் கணேசபுரத்தில் மற்றொரு ரெக்ரியேஷன் கிளப் தயார் நிலையில் உள்ளது. லைசென்ஸ் பெற விண்ணப்பித்துள்ளனர்.

