ADDED : நவ 06, 2025 11:28 PM

கோவை: கோவை மாநகராட்சி பகுதியில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தில் குழாய் பதிக்க தோண்டிய ரோடு, பாதாள சாக்கடை குழாய் பதிக்க தோண்டிய ரோடு, காஸ் குழாய் பதிக்க தோண்டிய ரோடுகள் இன்னும் சீரமைக்கப்படாமல் இருக்கிறது. இவற்றில் மாநகராட்சிக்கு சொந்தமான ரோடுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு, பகுதி பகுதியாக சீரமைப்பு பணி நடந்து வருகிறது. விடுபட்ட குறுக்கு வீதிகளில் தார் ரோடு போடுவதற்கு கணக்கெடுக்கப்பட்டு இருக்கிறது.
மாநகராட்சி பகுதியில் மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ரோடுகளும் இருக்கின்றன. இவற்றை அந்தந்த துறையை சேர்ந்தவர்களே சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும். அதற்குரிய தொகையை மாநகராட்சி செலுத்த வேண்டும். அவ்வகையில், மாநகராட்சியில் இருந்து மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு நிதி வழங்கியும் கூட, ரோட்டை இன்னும் சீரமைக்காததால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, கணபதியில் இருந்து சரவணம்பட்டி, சின்ன வேடம்பட்டி செல்லும் ரோட்டில் பாதாள சாக்கடை குழாய் பதிக்க தோண்டிய ரோடு சீரமைக்கப்படவில்லை. வாகனங்களில் செல்வோர் தடுமாற்றம் அடைகின்றனர். இரவு நேரத்தில் பயணிப்போர் விபத்தில் சிக்குகின்றனர்.
இதுதொடர்பாக, மாநில நெடுஞ்சாலைத்துறையினரிடம் கேட்ட போது, 'கணபதியில் இருந்து அத்தி பாளையம் பிரிவு வரை ரோடு சீரமைக்க 'வெட் மிக்ஸ்' கொட்டி பரப்பப்பட்டு உள்ளது. தார் ரோடு போடும் பணி விரைவில் துவங்கும். துடியலுார் - கீரணத்தம் ரோடு போடப்படுகிறது. மதுக்கரை மார்க்கெட் ரோடு, போத்தனுார் சாரதா மில் ரோடு பணிகள் ஒவ்வொன்றாக நடைபெறும்' என்றனர்.

