/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகரில் மழை தட்டியெடுத்தும் தேங்கவில்லை மழைநீர்! நன்கு சமாளித்தது மாநகராட்சி
/
நகரில் மழை தட்டியெடுத்தும் தேங்கவில்லை மழைநீர்! நன்கு சமாளித்தது மாநகராட்சி
நகரில் மழை தட்டியெடுத்தும் தேங்கவில்லை மழைநீர்! நன்கு சமாளித்தது மாநகராட்சி
நகரில் மழை தட்டியெடுத்தும் தேங்கவில்லை மழைநீர்! நன்கு சமாளித்தது மாநகராட்சி
ADDED : அக் 23, 2024 11:33 PM

கோவை : கோவையில் நேற்று முன்தினம், மாலையில் இருந்து இரவு வரை கன மழை பெய்தது; நகர் பகுதியில் மட்டும், 87.60 மி.மீ., மழை பதிவானது. மாநகராட்சி நிர்வாகம் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, பொதுமக்களுக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
மாவட்டத்தில் மிக அதிக அளவாக, பீளமேடு விமான நிலையத்தில், 87.60 மில்லி மீட்டரும், கோவை தெற்கு தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில், 70 மில்லி மீட்டரும் மழை பதிவானது.
மழை துவங்கியதும், மாநகராட்சி குழுவினர் 'அலெர்ட்' செய்யப்பட்டனர். பாதிக்கப்படும் பகுதிகளாக அறியப்பட்ட இடங்களுக்கு, அந்தந்த மண்டல உதவி நிர்வாக பொறியாளர்கள் தலைமையில் உதவி பொறியாளர், சுகாதார ஆய்வாளர், துாய்மை பணியாளர்கள் கொண்ட குழுவினர் சென்றனர்.
பாதிப்பு இல்லை
லங்கா கார்னர், அவிநாசி ரோடு மேம்பால சுரங்கப்பாதை, உப்பிலிபாளையம், காளீஸ்வரா மில், கிக்கானி பாலம் மற்றும் சிவானந்தா காலனி ரயில்வே பாலம் ஆகிய இடங்களில் கண்காணித்தனர். கன மழை பெய்த போதிலும் சுரங்கப்பாதைகளுக்கு, குறைந்த அளவே தண்ணீர் வந்தது; உடனுக்குடன் மோட்டார் இயக்கி, வெள்ளம் வெளியேற்றப்பட்டதால், வாகன போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.
வடகோவை மேம்பாலத்தில் தண்ணீர் தேங்கியது. மாற்று ஏற்பாடுகளை இதுவரை செய்யவில்லை.
மேம்பாலத்தில் வாகனங்கள் சென்று விடுவதால், சுரங்கப்பாதையை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர்.
அதே போல், வ.உ.சி., பூங்கா மைதானத்திலும் மழை நீர் தேங்கியது; இருப்பினும் சற்று நேரத்தில் வடிகால் வாயிலாக வடிந்து விட்டது.
கமிஷனர் கள ஆய்வு
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், கொட்டும் மழையிலும் குழுவினருடன் கள ஆய்வு மேற்கொண்டார். எட்டு இடங்களுக்கு சென்று, மழை நீரால் பாதிப்பு ஏற்படாத அளவுக்கு நடவடிக்கை எடுத்தார்.
சுங்கம் நிர்மலா கல்லுாரி அருகே மழை நீர் தேங்குவதை தவிர்க்க, வாலாங்குளம் வரை வடிகால் நீட்டிக்க அறிவுரை வழங்கினார்.
கட்டுப்பாட்டு மையத்துக்கு வந்த தகவல்கள் உடனுக்குடன் அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டது.
உடனுக்குடன் எடுத்த நடவடிக்கைகளால், லங்கா கார்னர், அவிநாசி ரோடு பழைய மேம்பாலத்தின் சுரங்கப்பாதை, காளீஸ்வரா மில், கிக்கானி பாலம், சிவானந்தா காலனி பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கவில்லை; போக்குவரத்தும் பாதிக்கவில்லை. மக்கள் நிம்மதியாக இவ்வழியாக சென்றனர்.

