/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேற்குப்புறவழிச்சாலை திட்டத்திற்காக நீர்வழிப்பாதையை சிதைக்க வேண்டாம்: விவசாயிகள் கோரிக்கை
/
மேற்குப்புறவழிச்சாலை திட்டத்திற்காக நீர்வழிப்பாதையை சிதைக்க வேண்டாம்: விவசாயிகள் கோரிக்கை
மேற்குப்புறவழிச்சாலை திட்டத்திற்காக நீர்வழிப்பாதையை சிதைக்க வேண்டாம்: விவசாயிகள் கோரிக்கை
மேற்குப்புறவழிச்சாலை திட்டத்திற்காக நீர்வழிப்பாதையை சிதைக்க வேண்டாம்: விவசாயிகள் கோரிக்கை
ADDED : அக் 16, 2024 11:01 PM
கோவை : கோவை தெற்கு வருவாய் கோட்டத்துக்குட்பட்ட, விவசாயிகள் குறைதீர்ப்புக்கூட்டம், கோவை தெற்கு கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
வருவாய் கோட்டாட்சியர் ராம்குமார் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் பழனிச்சாமி, துணைத்தலைவர் பெரியசாமி, நிர்வாகிகள் துரைசாமி, பாலசுப்ரமணியம் ஆகியோர் அளித்த மனு:
கோவை மேற்குப்புறவழிச்சாலை திட்டத்தில், பாலக்காடு சாலை மைல்கல் முதல் மாதம்பட்டி வரை சாலைப்பணி வேகமாக நடந்து வருகிறது.
தீத்திபாளையம் கிராமத்தில் ஓம் சக்தி கோவில் முதல் குப்பனுார் சாலை வரை 1.5. கி.மீ., துாரத்திற்கு, கிராம இணைப்பு சாலைகள் போடப்பட்டு மக்களும் விவசாயிகளும் பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி வாகனங்கள், கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள் இச்சாலை வழியாக சென்று வருகின்றன.
ஓம்சக்தி கோவிலிலிருந்து குப்பனுார் செல்லும் பாதையில், கன்னிமார் குட்டை அருகில் மேற்குப்புறவழிச்சாலை, தென்வடலாக குறுக்கே செல்கிறது.
அங்கு கன்னிமார் குட்டையில் இருந்து வரும் தண்ணீர், பள்ள வாரியின் வழியாக வந்து தீத்திபாளையம் கிராமத்தின் வழியாகவும், பீட் பள்ளத்தின் வழியாகவும் சென்று, நொய்யலில் கலக்கிறது.
இந்த நீர்வழிப்பாதையின் மீது அமைக்கப்படும் பாலம் விவசாய நிலத்தையும், சாலையையும் பாதிக்கும். அதனால் நீர்வழிப்பாதைக்கோ, சாலைக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் சாலை அமைக்க வேண்டும்.
ஆனால் தற்போது வேகமாக நடைபெறும் மேற்குப்புறவழிச்சாலை பணிகளால், நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயக்குடும்பங்கள் இணைப்புச்சாலை வழியாக, குப்பனுார் கிராமத்துக்கு செல்வது பாதிக்கப்படும்.
பள்ளி வாகனங்கள் உள்ளிட்ட, அனைத்து வாகனப்போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படும். அதனால் ஏற்கனவே இருக்கும் கிராம சாலைக்கு, எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், மேற்குப்புறவழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறியுள்ளனர்.
களஆய்வு மேற்கொண்டு மாற்றி அமைப்பதற்கான முயற்சியை மேற்கொள்வதாக, தெற்கு கோட்டாட்சியர் ராம்குமார் உறுதியளித்தார்.

