/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏமாற்றம் தருகிறது மின்கட்டண குறைப்பு!
/
ஏமாற்றம் தருகிறது மின்கட்டண குறைப்பு!
ADDED : பிப் 20, 2024 05:55 AM

நாராயணசாமி, ஓய்வு பெற்ற ஆசிரியர், ராமநாதபுரம்: தமிழக பட்ஜெட்டில் ஆசிரியர், அரசு ஊழியர் ஓய்வூதிய திட்டம் குறித்த எவ்வித அறிவிப்பும் இல்லை. நீண்டகால எதிர்பார்ப்பு பற்றிய செய்தி இடம்பெறாதது, இரு தரப்பினருக்கும் பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.
வரவேற்கிறோம்
கண்ணன், பம்ப் செட் விற்பனையாளர், மலுமிச்சம்பட்டி: கோவை, திருப்பூரில் நொய்யல் நதியை புனரமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்பது வரவேற்கத்தக்கது. அதேபோல், தகவல் தொழிலநுட்ப பூங்கா இங்கு அமைக்கப்படுவதால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.
மின் கட்டணம் ஏமாற்றம்
அருண்குமார், ஸ்பின்னிங் மில் உரிமையாளர், கணேசபுரம், அன்னூர்: மின் கட்டண பிரச்னைகளால், ஸ்பின்னிங் மில்களை இயக்க முடியாத நிலை உள்ளது. பட்ஜெட்டில் மின் கட்டணம் குறைப்பு குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்தோம். இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.
அத்திக்கடவு திட்டம் என்னாச்சு?
சுந்தரமூர்த்தி, விவசாயி, பொன்னே கவுண்டன்புதூர், அன்னூர்: அத்திக்கடவு திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்பது குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. கூடுதலாக உழவர் சந்தைகள் அமைப்பது குறித்தும் அறிவிப்பு இல்லை. கரும்பு விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் நிலுவையுள்ளது. அது குறித்தும் அறிவிப்பு இல்லை.
நெல்மூட்டைக்கு பாதுகாப்பு?
பழனிசாமி, 62, காரமடை: தமிழக பட்ஜெட்டில், போக்குவரத்து துறைக்கு பெரியதாக அறிவிப்புகள் எதுவும் இல்லை. போக்குவரத்து ஊழியர்கள் பிரச்னைக்கும் தீர்வு இல்லை.
மதுக்கடைகள் கூட போலீஸ் பாதுகாப்புடன் இயங்குகின்றன. ஆனால் விவசாயிகள் அடுக்கி வைத்திருக்கும் நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க, தேவையான ஏற்பாடுகள் இல்லை.
வேலை வாய்ப்பு பெருகும்
சண்முகம், 54, பெள்ளாதி: பட்ஜெட்டில் அறிவித்ததை எல்லாம் விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும். கோவைக்கு நூலகம், ஐ.டி., நிறுவனம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் வேலைவாய்ப்புகள் பெருகும்.
ஆயிரம் ரூபாய் திட்டம் நல்லது
பிரகாஷ் ராஜ்,25. ஓட்டல் பணியாளர், வீரகேரளம்: மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவது போல, தமிழ் வழி கல்வி படிப்பை முடித்து, கல்லூரியில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கும், மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வரவேற்கத்தக்கது.
பயனாளிகளுக்கு கிடைக்கணும்
பிரகாஷ், 45. மளிகை கடை. வீரகேரளம்: .வரும் நிதியாண்டில், வீடு இல்லாத ஏழை மக்களுக்கு, ஒரு லட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என அறிவித்துள்ளனர். இதை வரவேற்கிறேன். ஆனால், இந்த திட்டத்தில், வீடு இல்லாத உண்மையான பயனாளிகள் பயன்பெற வேண்டும்.

