/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஞானத்தை எண்ணங்களால் அலங்காரப்படுத்துங்கள்'
/
'ஞானத்தை எண்ணங்களால் அலங்காரப்படுத்துங்கள்'
ADDED : ஜூலை 06, 2025 11:33 PM

மேட்டுப்பாளையம்; 'ஞானத்தை எண்ணங்களால் அலங்காரப்படுத்துங்கள், துாய்மைப்படுத்தி சீர்படுத்துங்கள். அந்த நிலையை நாம் அனுபவித்துவிட்டால், ஆத்மாவை தேட வேண்டாம்' என சுவாமி சங்கரானந்தா பேசினார்.
காரமடை திம்மம்பாளையம் அருகே ஸ்ரீ நாராயணி அம்மா ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இங்கு மலுமிச்சம்பட்டி ஆத்ம வித்யாலயம் அத்வைத வேதாந்த குருகுல சுவாமி சங்கரானந்தா பேசியதாவது:-
குணம் என்பது உள்ளார்ந்த தன்மை, உள்ளார்ந்த இயல்பு. விட்டு பிரியாதது, எப்பவும் இருப்பது சொரூபம். சொரூபம் அனுமதிப்பது குணமாகும். உதாரணத்திற்கு சர்க்கரை என்றால் இனிப்பு. சர்க்கரையின் சொரூபம் இனிப்பு. இனிப்பு மாறாது. இப்போது சர்க்கரையின் சொரூபம் அனுமதித்தால், சர்க்கரையின் பழுப்பு நிறத்தை வெள்ளையாக மாற்றலாம், சர்க்கரையை பவுடராக மாற்றலாம். இதை சர்க்கரையின் குணம் என சொல்லலாம்.
குணத்தையும், சொரூபத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். குணங்களை மாற்றுவதால் சொரூபம் கெடுவது இல்லை. மாறாதது சொரூபம், மாறுவது குணம். மாறுவதும், மாறாததுவும் ஒரே இடத்தில் இருக்க முடியும்.
மனிதனின் சொரூபம் என்ன, குணம் என்ன. மனிதனின் எண்ணங்கள் எல்லாம் குணங்கள். எண்ணம் தோன்றும் இடம் சொரூபம். சொரூபத்தை அறிந்தால் மோட்சம். குணத்தை அறிந்தால் பந்தம்.
சொரூபம் ஞானமாகும். ஞானத்தை எண்ணங்களால் அலங்காரப்படுத்துங்கள், துாய்மைப்படுத்தி சீர்படுத்துங்கள். அந்த நிலையை நாம் அனுபவித்துவிட்டால், ஆத்மாவை தேட வேண்டாம். எண்ணங்களால் தான் நாம் வேறுபடுகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்வில் ஏராளமான ஆசிரம பக்தர்கள் கலந்து கொண்டனர்.--------

