/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொடரும் போராட்டம்; பணிகள் பாதிப்பு
/
தொடரும் போராட்டம்; பணிகள் பாதிப்பு
ADDED : நவ 29, 2024 12:21 AM

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினரின், தொடர் போராட்டத்தினால், பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர், கோரிக்கைகளை வலியுறுத்தியும், பணியிடங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில், பணியை புறக்கணித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மூன்றாவது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், வருவாய்துறை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் கூறுகையில்,'வருவாய்துறையில் உள்ள பணியிடங்களை கலைக்கப்பட எடுக்கும் நடவடிக்கைகளை அரசு முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட, 97 பணியிடங்களை உடனடியாக வழங்க வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கான உச்ச வரம்பினை ஐந்து சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து, 25 சதவீதமாக நிர்ணயம் செய்ய வேண்டும் இவையுள்ளிட்ட, ஒன்பது அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்,' என்றனர்.
* கிணத்துக்கடவு தாலுகாவில், 29 பணியாளர்களில், 13 பேர் கடந்த மூன்று நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல பணிகள் பாதித்துள்ளதுடன், மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது.
கிணத்துக்கடவு தாசில்தார் சிவகுமார் கூறியதாவது:
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், கிணத்துக்கடவில் 13 நபர்கள் வேலை புறக்கணிப்பு செய்துள்ளனர். இதனால் மற்ற வருவாய்த் துறையைச் சேர்ந்த அலுவலர்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்படுகிறது.
மேலும், குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டிய பணிகள் தாமதமாகிறது. இதனால் பணியாளர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. பொதுமக்கள் பலர் சர்டிபிகேட் கேட்டு விண்ணப்பித்தாலும், உரிய நேரத்தில் வழங்க முடிவதில்லை. இதனால், இரு தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு, கூறினார்.

