ரூ.2.18 லட்சம் மோசடி
கோவை: வடவள்ளியை சேர்ந்தவர் அழகர்சாமி, 45; இவர் அவிநாசி ரோட்டில் உள்ள உணவகத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இங்கு சிட்ராவை சேர்ந்த சித்ரகலா, 52, என்பவர் கணக்காளராக பணிபுரிந்து வந்தார். உணவகத்தில் வரவு, செலவு கணக்குகள் சரி பார்க்கப்பட்டது. அப்போது ரூ.2.18 லட்சம் கணக்கில் வராமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரித்ததில், சித்ரகலா, 2020ம் ஆண்டு டிச., மாதத்தில் இருந்து, உணவகத்தில் வசூலான ரூ.2.18 லட்சத்தை எடுத்து மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. அழகர்சாமி பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் சித்ரகலா மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
--ரயில் மோதி வாலிபர் பலி
கோவை: போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் அருகே, ரயில்வே தண்டவாளத்தில், 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரயில் மோதி இறந்து கிடந்தார். அப்பகுதி மக்கள் போத்தனுார் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வாலிபரின் உடலை சோதனை செய்தனர். ரயில்வே போலீசார் அந்த வாலிபரின் உடலை, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
--வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் கைது
கோவை: கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் இசைராஜா, 27; இவர் கோவை உப்பிலிபாளையத்தில் தங்கியிருந்து பெயின்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் காலை, வரதராஜபுரம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஏற்கனவே அறிமுகமான ஆகாஷ் என்பவர் தனது நண்பர்களுடன் அங்கு வந்து, பைக்கை மறித்து இசைராஜாவிடம் பணம் கேட்டார். தன்னிடம் பணம் இல்லை என்றார் இசைராஜா. உடனே ஆகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் கத்தியை காட்டி மிரட்டி இசைராஜா வைத்திருந்த ரூ.2,500 பணம், மொபைல் போன் மற்றும் பைக் ஆகியவற்றை பறித்து தப்பினர். இசைராஜா புகாரின் பேரில், சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து, வழிப்பறியில் ஈடுபட்ட உப்பிலிபாளையத்தை சேர்ந்த ஆகாஷ், 21, காட்வின், 20, சக்திவேல், 20, ஆகிய மூவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
--மது குடித்து நகை திருட்டு
கோவை: டாடாபாத்தை சேர்ந்தவர் விக்னேஷ், 29; பிளம்பிங் கான்ட்ராக்டர். இவரிடம் ரத்தினபுரியை சேர்ந்த முத்துகிருஷ்ணன், 39, என்பவர் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இருவரும் மது அருந்தியுள்ளனர். அதன் பின் விக்னேஷ், தனது பைக்கில் முத்துக்கிருஷ்ணனை அழைத்துச் கொண்டு, அவரது வீட்டின் அருகே இறக்கி விட்டார். அந்த சமயத்தில் முத்துகிருஷ்ணன், விக்னேஷ் கழுத்தில் அணிந்து இருந்த, 2 பவுன் தங்க நகையை திருடியுள்ளார். வீட்டிற்கு சென்ற விக்னேஷ், நகை காணாமல் போனது குறித்து, ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் முத்துகிருஷ்ணன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
முதியவர் மீது வழக்கு
கோவை: விலங்குகள் நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருபவர் ஷெபி மேரி; இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன், விளாங்குறிச்சி சாலையில் நாய்களை ஒருவர் அடித்து துன்புறுத்துவதாக, தகவல் கிடைத்தது. அவர் அங்கு சென்று, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் பீளமேடு விளாங்குறிச்சி சாலையைச் சேர்ந்த பாரிவேந்தன் என்பவர், நாய்களை துன்புறுத்தியது தெரிந்தது. ஷெபி மேரி பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் பாரிவேந்தன், 66, மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
--மூதாட்டியிடம் நகை திருட்டு
கோவை: கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் லட்சுமி, 72; இவர் டி.வி.எஸ்., நகரில் இருந்து அரசு பஸ்சில் காந்திபுரம் சென்றார். காந்திபுரம் வந்ததும் பஸ்சை விட்டு இறங்கினார். அப்போது அவரது கழுத்தில் அணிந்திருந்த, 4 பவுன் தங்க நகை திருட்டு போயிருந்தது. ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
--விபத்தில் வாலிபர் பலி
கோவை: கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் தீபக், 21; இவர் தனது நண்பர் வேலுகுமார், 19, என்பவருடன் பைக்கில் மேட்டுப்பாளையம் ரோட்டில் சென்றார். தீபக் பைக்கை ஓட்டினார். துடியலுார் அருகே, எதிரே வந்த பைக் தீபக் மீது மோதியது. மூவரும் துாக்கி வீசப்பட்டனர். இதில் தீபக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த வேலுகுமார் மற்றும் எதிரே பைக்கில் வந்த சின்ன துரையை, அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேற்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

