ADDED : ஜூன் 02, 2025 11:33 PM
விபச்சார புரோக்கர்கள் கைது
கோவை கவுண்டம்பாளையம் கண்ணப்ப நகரை சேர்ந்தவர் அத்தீஸ்வரன், 30 இவர் கோவில்மேடு, மஞ்சேஸ்வரி காலனியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் வந்த நபர் அப்பகுதியில் உள்ள வீட்டில் பெண்கள் உல்லாசத்துக்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார். அத்தீஸ்வரன், கவுண்டம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விசாரணையில் அப்பகுதியில் உள்ள வீட்டில் விபச்சாரம் நடப்பது தெரிந்தது. அவ்வீட்டில் இருந்த நல்லாம்பாளையத்தை சேர்ந்த மகாலட்சுமி, 38, மதுக்கரை மரப்பாலத்தை சேர்ந்த சிவரஞ்சனி, 28, கோவில்மேடு, மஞ்சேஸ்வரி காலனியை சேர்ந்த சத்தியா, 37, ரஞ்சித்குமார், 35, ரத்தினபுரியை சேர்ந்த கோபிநாத், 29, ராகேஷ், 20, சாய்பாபா காலனியை சேர்ந்த தீபா தர்ஷினி, 20 ஆகிய ஏழு பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
மாடியில் இருந்து விழுந்தவர் பலி
கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு டி.வி.சாமி ரோட்டை சேர்ந்தவர் அனுராக், 51. மார்பிள் கடை நடத்தி வந்தார். கடந்த சில மாதங்களாக மன உளைச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் முதல் மாடியில் நின்றிருந்தபோது தவறி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
புகையிலைப் பொருள் விற்ற மூவர் கைது
கோவை ரேஸ்கோர்ஸ், துடியலுார், செல்வபுரம் போலீசார் புகையிலைப் பொருட்கள் விற்பனை குறித்து சோதனை நடத்தினர். இதில், மருங்கூர் திருவாடனையை சேர்ந்த சரவணன், 32, சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த ராம்கி, 27, செல்வபுரம் சொக்கம்புதுாரை சேர்ந்த கிருஷ்ணவேணி, 62, ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 34 பாக்கெட்டுகள் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

