/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போத்தனுார் - பாலக்காடு வழித்தடத்துக்கு மாற்றாக பை-பாஸ் ரயில்பாதை! திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள் ஆலோசனை
/
போத்தனுார் - பாலக்காடு வழித்தடத்துக்கு மாற்றாக பை-பாஸ் ரயில்பாதை! திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள் ஆலோசனை
போத்தனுார் - பாலக்காடு வழித்தடத்துக்கு மாற்றாக பை-பாஸ் ரயில்பாதை! திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள் ஆலோசனை
போத்தனுார் - பாலக்காடு வழித்தடத்துக்கு மாற்றாக பை-பாஸ் ரயில்பாதை! திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள் ஆலோசனை
ADDED : டிச 16, 2025 06:31 AM

பொள்ளாச்சி: கோவை, போத்தனுார் - பாலக்காடு வழித்தடத்துக்கு மாற்றாக, பொள்ளாச்சி வழியாக பை-பாஸ் ரயில் பாதையை, 300 கோடி ரூபாய் செலவில் அமைக்க ரயில்வே அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
கோவை, போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன்களில் இருந்து தினமும் எக்ஸ்பிரஸ், பயணியர் ரயில், சரக்கு ரயில்கள், கேரளா மாநிலத்துக்கு சென்று வருகின்றன.இந்த ரயில்வே வழித்தடங்கள் வாளையார் வழியாக அடர்ந்த வனப் பகுதியில் அமைந்துள்ளன.
இதனால், யானை உள்ளிட்ட வனவிலங்குள் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது, ரயிலில் அடிப்பட்டு இறக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்தது.
வன உயிரினங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். வனவிலங்குகள் உயிரிழப்பை தடுக்க, கேமராக்கள், சென்சார் வசதியுடன் அமைக்கப்பட்டன. யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க, 'லோகோ பைலட்'க்கு தெரிவிக்க, எல்.இ.டி. திரைகள் வைக்கப்பட்டன.
ரயில்வே துறையின் இதுபோன்ற நடவடிக்கையால் தற்போது யானைகள் இறப்பு தடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், வனவிலங்குகள் நடமட்டத்தால், இப்பாதையில் ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்படுகின்றன. இவ்வழியாக ரயில்கள், 60 கி.மீ. வேகத்தில் மட்டுமே இயக்குவதால், பயண நேரம் அதிகரித்துள்ளது. அதிகமான ரயில்கள் இயக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க, போத்தனுார் - பாலக்காடுக்கு மாற்று வழித்தடமாக, பொள்ளாச்சி வழித்தடத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.
பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனுக்கு ரயில்கள் வந்த பின், பாலக்காடு செல்ல ரயில் இன்ஜின்களை திருப்ப வேண்டும். அதே போன்று பாலக்காட்டிலும் ரயில் இன்ஜின்களை திருப்பும் போது காலவிரயம் ஏற்படும்.
எனவே, பொள்ளாச்சி சந்திப்புக்கு வராமல், 'பை-பாஸ்' வழித்தடம் உருவாக்க முடிவு செய்யப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.கோவை, போத்தனுாரில் இருந்து பாலக்காட்டுக்கு செல்ல, 56 கி.மீ. துாரத்துக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது, பொள்ளாச்சி வழியாக பை-பாஸ் வழித்தடம் அமைத்தால், 104 கி.மீ. துாரம் அதிகமாக இருக்கும். எனினும், ரயில்கள் வேகத்தை அதிகரித்து இயக்குவதன் வாயிலாக பயண நேரம் அதிகரிக்க வாய்ப்பு இருக்காது என கருதப்படுகிறது.
பொள்ளாச்சி சந்திப்புக்கு வராமல், நேரடியாக ரயில்களை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ரயில்வே அதிகாரிகள் சர்வே பணிகளை மேற்கொண்டுள்ளனர். ஆனைமலையில் இருந்து கோவில்பாளையம் வழித்தடத்தில், ரயில்களை இயக்க சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.
இந்த வழித்தடத்தில், 300 கோடி ரூபாய் செலவில் மொத்தம், 2.5 கி.மீ. துாரத்துக்கு 'பை- பாஸ்' அமைத்து ரயில் இயக்கவும், புதியதாக கோவில்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக ஆய்வு செய்து திட்ட அறிக்கை தயாரிக்க அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
அதே போன்று, பாலக்காடு சந்திப்புக்கு செல்லாமல், பாலக்காடு நகரம் வழியாக, 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1.8 கி.மீ.க்கு பை-பாஸ் அமைத்து ரயில் இயக்குவது குறித்தும் ரயில்வே அதிகாரிகள் ஆலேசானை மேற்கொண்டுள்ளனர்.
பொள்ளாச்சி வழித்தடத்தில், பை-பாஸ் ரயில் பாதை அமைப்பதால், பொள்ளாச்சிக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வாய்ப்புகள் ஏற்படும் என கருதப்படுகிறது.இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து, பாலக்காடு ரயில்வே அதிகாரிகள், தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு வழங்கி அனுமதி பெறவும் முடிவு செய்ததாக தெரிகிறது.
இதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பின் செயல்படுத்த வேண்டும் என, ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

