/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேயிலையில் கொப்பள நோய்: மகசூல் பாதிக்கும் அபாயம்
/
தேயிலையில் கொப்பள நோய்: மகசூல் பாதிக்கும் அபாயம்
ADDED : செப் 01, 2025 07:24 PM

வால்பாறை:
வால்பாறையில் தேயிலையில் பரவும் கொப்பள நோயால், செடிகள் துளிர்விடாமல் பாதித்துள்ளன.
வால்பாறையில் தேயிலை மிக முக்கிய தொழிலாக உள்ளது. இங்குள்ள, 40க்கும் மேற்பட்ட எஸ்டேட்களில் மொத்தம், 32 ஆயிரத்து 825 ஏக்கரில் தேயிலை, காபி, ஏலம், மிளகு போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இதில், 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை மட்டும் பயிரிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த மூன்று மாதத்திற்கு மேலாக வால்பாறையில் தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து பெய்கிறது. இதனால் தேயிலை செடிகள் துளிர்விட முடியாமல், உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் தற்காலிக தொழிலாளர்கள் வேலையிழந்து தவிக்கின்றனர்.
இதனிடையே வால்பாறையில் கடந்த மூன்று நாட்களாக மழைப்பொழிவு குறைந்து, வெயில் நிலவும் நிலையில், தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விட துவங்கியுள்ளன. பல எஸ்டேட்களில் தேயிலை செடிகளை கவாத்து செய்துள்ளனர்.
இந்நிலையில், பெரும்பாலான எஸ்டேட்களில் தேயிலை செடிகளில் கொப்பள நோய் பாதிப்பு காணப்படுகிறது. இந்நோயால், தேயிலை செடிகளின் மேல்பகுதி கருகி வருவதோடு, உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எஸ்டேட்களில் இந்நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
பருவமழை பொழிவுக்கு பின், சூரிய ஒளி குறைவு, பனி மூட்டம் போன்ற இயற்கை காரணிகளால், தேயிலை செடிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, 12 மணி நேரத்திற்கு மேல் தேயிலை செடி மீது ஈரப்பதம் இருப்பதால் தான் கொப்பள நோய் பரவுகிறது.
தேயிலை செடிகளின் இடையே வைக்கப்பட்டுள்ள மரங்களின் கிளைகளை அகற்றி, வெயில் படும் வகையில் நடவடிக்கை எடுத்தால் கொப்பள நோயை கட்டுப்படுத்தலாம். கொப்பள நோயிலிருந்து தேயிலை செடிகளை பாதுகாக்க, உபாசி தேயிலை ஆராய்ச்சியாளர்கள் அறிவுரையின் படி பூச்சி மருந்து தெளிக்கப்படுகின்றன.
இவ்வாறு, கூறுகின்றனர்.