/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கண்டுகொள்ளாத மாநகராட்சி... ஏரியா சபாவா....அப்படீன்னா? கேள்விக்கு இல்லை 'பேச்சு மூச்சு'
/
கண்டுகொள்ளாத மாநகராட்சி... ஏரியா சபாவா....அப்படீன்னா? கேள்விக்கு இல்லை 'பேச்சு மூச்சு'
கண்டுகொள்ளாத மாநகராட்சி... ஏரியா சபாவா....அப்படீன்னா? கேள்விக்கு இல்லை 'பேச்சு மூச்சு'
கண்டுகொள்ளாத மாநகராட்சி... ஏரியா சபாவா....அப்படீன்னா? கேள்விக்கு இல்லை 'பேச்சு மூச்சு'
UPDATED : பிப் 28, 2024 02:39 AM
ADDED : பிப் 28, 2024 01:46 AM

கோவை:'ஏரியா சபா' கூட்டங்கள் குறித்த ஆர்.டி.ஐ., கேள்விகளுக்கு தகவல் தராமல் மாநகராட்சி மவுனம் காத்து வருவது,மக்கள் பிரச்னையை விவாதிக்கும்கூட்டங்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது.
தமிழகத்தில், கிராம சபை கூட்டங்களில் கிராம பஞ்சாயத்து தலைவர் தலைமையில் மக்களின் அன்றாட பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு, அதிகாரிகள் முன்னிலையில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதேபோல், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளிலும் ஆண்டுக்கு நான்கு 'ஏரியா சபா' கூட்டங்கள் நடத்த, அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தேசிய வாக்காளர் தினமான ஜன., 25ம் தேதி, டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்.,14, அண்ணா பிறந்த நாளான செப்., 15 மற்றும் சர்வதேச மனித உரிமை தினமான டிச., 10 ஆகிய தினங்களில், ஏரியா சபா கூட்டங்கள் நடத்தி, மக்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
மாநகராட்சியை பொருத்தவரை, வார்டு கவுன்சிலர் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய, வார்டு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில், 100 வார்டுகள் உள்ள நிலையில், மக்கள் பிரச்னை தொடர்பான ஏரியா சபா கூட்டங்களுக்கு, பெரியளவில் முக்கியத்துவம் தருவதில்லை.
கடந்தாண்டு செப்., 15, டிச., 10ம் தேதிகளில், சொற்ப அளவிலான வார்டுகளிலே இக்கூட்டம் நடந்துள்ளது. கடந்த ஜன., 25ம் தேதி, எந்த வார்டிலும் கூட்டம் நடந்ததாகவே தெரியவில்லை.
ஆர்.டி.ஐ., கேள்விக்கு பதில் இல்லை
இந்நிலையில், சேரன் மாநகரை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் ரவிச்சந்திரன், மாநரகாட்சியின் ஐந்து மண்டல பொது தகவல் அலுவலர்களிடமும் வார்டு வாரியாக ஏரியா சபா கூட்டங்கள் குறித்த விபரங்கள் கோரி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆனால், இரு மாதங்களை கடந்தும், இதுவரை மாநகராட்சி தரப்பில் பதில் வரவில்லை. பிரச்னைகளுக்கு தீர்வு தரும் இக்கூட்டங்களுக்கு, மாநகராட்சி நிர்வாகம் முக்கியத்துவம் தருவதில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில், இது அமைந்துள்ளது.
அதிகாரிகள் தயாரில்லை!
ரவிச்சந்திரன் கூறுகையில்,''கடந்தாண்டு டிச., 14ம் தேதி ஆர்.டி.ஐ.,யில் கேள்வி எழுப்பியும் ஏரியா சபா கூட்டங்கள் குறித்து, இதுவரை தகவல் வரவில்லை. சென்னை மாநகராட்சி வலைதளத்தில் இக்கூட்டங்கள் குறித்த தகவல்கள் இடம்பெறுகின்றன.
கோவை மாநகராட்சி வலைதளத்தில் ஒன்று கூட இல்லை. மாநகராட்சிதான் இக்கூட்டத்தை நடத்த வேண்டும். இப்படியிருக்க, மக்கள் பிரச்னைக்கு தீர்வு தரும் இக்கூட்டத்துக்கு, அதிகாரிகள் முக்கியத்துவம் தராதது ஏன் என்பது மர்மமாக உள்ளது,'' என்றார்.

