/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளியில் இடைநிற்றலை தவிர்க்க நடவடிக்கை! கோவை கலெக்டர் 'அட்வைஸ்'
/
பள்ளியில் இடைநிற்றலை தவிர்க்க நடவடிக்கை! கோவை கலெக்டர் 'அட்வைஸ்'
பள்ளியில் இடைநிற்றலை தவிர்க்க நடவடிக்கை! கோவை கலெக்டர் 'அட்வைஸ்'
பள்ளியில் இடைநிற்றலை தவிர்க்க நடவடிக்கை! கோவை கலெக்டர் 'அட்வைஸ்'
ADDED : பிப் 04, 2024 08:22 PM

பொள்ளாச்சி:''பள்ளியில் இடைநிற்றலை தவிர்க்க, ஒரு உறுப்பினர், ஒரு மாணவர் என்ற திட்டத்தின் கீழ், பள்ளி மேலாண்மை குழுவினர் செயல்பட்டு, அனைவருக்கும் கல்வி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்,'' என, பள்ளி மேலாண்மை குழு மாநாட்டில் கோவை கலெக்டர் தெரிவித்தார்.
பள்ளி கல்வித்துறை சார்பில், அரசுப்பள்ளிகளில் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மை குழு தலைவர்களுக்கான மாநாடு, பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் நடந்தது. கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி வரவேற்றார். பொள்ளாச்சி சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு கையேடுகள் வழங்கப்பட்டன.
கோவை கலெக்டர் கிராந்திகுமார் பேசியதாவது:
இந்தியாவில், இரண்டாவது பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது. இதற்கு முக்கியமான காரணம், கடந்த, 1950 - 60 மற்றும், 70ம் ஆண்டுகளில் கல்விக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவமே ஆகும்.
இதனால்,வளர்ச்சிப்பாதையில் தமிழகம் செல்கிறது. தற்போது தமிழகத்தில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு தொழிலாளர்கள் கோவை வந்து பணியாற்றுகின்றனர். அவர்களின் குழந்தைகள் முறையாக பள்ளி கல்வியை தொடர்வதற்கான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஒரு உறுப்பினர், ஒரு மாணவர் என்ற திட்டத்தின் அடிப்படையில், பள்ளி வராமல் இடைநின்ற குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு அனைவருக்கும் கல்வி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
மாதந்தோறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற வேண்டும். பள்ளிக்கு தேவையான வசதிகள் குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.'நம்ம ஊரு, நம்ம பள்ளி' திட்டத்தின் கீழ், பல்வேறு தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு வாயிலாக, 14 கோடி ரூபாய் மதிப்பில், பள்ளி கட்டடங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளன.
பள்ளிகளில் செயல்படும் திட்டங்கள் முறையாக செயல்படுகிறதா என கண்காணிப்பு செய்ய வேண்டும். இவ்வாறு, கலெக்டர் பேசினார்.
கல்வி உரிமைச்சட்டம், பள்ளி மேலாண்மை குழுவும், பள்ளி மேம்பாட்டுத்திட்டமும் என்ற தலைப்பில் கல்வியாளர் ரத்தின விஜயனும், ஆரோக்கியம் குறித்துமுதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் பிரதீப் ஆகியோர்பேசினர்.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் வள்ளியம்மாள், என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின் செயலர் ராமசாமி உள்ளிட்டோர் பேசினர். மாவட்ட கல்வி அலுவலர் கேசவகுமார் நன்றி கூறினார்.
தொடர்ந்து, சிறப்பாக செயல்பட்ட பள்ளி மேலாண்மை குழு தலைவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாவட்டத்துக்கு உட்பட்டகல்வித்துறை அதிகாரிகள், பள்ளி தலைமையாசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள் என, 1,526 பேர் பங்கேற்றனர்.

