/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
100 நிமிடத்துக்குள் நடவடிக்கை அவசியம்! பறக்கும் படையினருக்கு அறிவுறுத்தல்
/
100 நிமிடத்துக்குள் நடவடிக்கை அவசியம்! பறக்கும் படையினருக்கு அறிவுறுத்தல்
100 நிமிடத்துக்குள் நடவடிக்கை அவசியம்! பறக்கும் படையினருக்கு அறிவுறுத்தல்
100 நிமிடத்துக்குள் நடவடிக்கை அவசியம்! பறக்கும் படையினருக்கு அறிவுறுத்தல்
ADDED : மார் 15, 2024 11:58 PM

கோவை:கோவை வடக்கு சட்டசபை தொகுதிக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு தேர்தல் பணி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மற்றும் தேர்தல் அறிவிப்பு வந்ததும் செய்ய வேண்டிய பணிகள் குறித்த கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் சுரேஷ் கூறியதாவது:
தேர்தல் தேதி அறிவித்ததும் ஒரு மணி நேரத்துக்குள், பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட வேண்டும். தேர்தல் கட்டுப்பாட்டு அறை, தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் சி-விஜில் மொபைல் செயலி மூலமாக தெரிவிக்கப்படும் புகார்கள் மீது, 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுத்து, அதன் விபரத்தை, அச்செயலியில் பதிவிட வேண்டும்.
இல்லையெனில், அப்புகார் தலைமை தேர்தல் அலுவலர் கவனத்துக்கு சென்று விடும்; அங்கிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு, பதிலளிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
பணம், பரிசுப்பொருட்கள், தங்க நகைகள், டோக்கன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தால், உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும்.
கட்சி கொடிக்கம்பங்கள், கொடிகள், பிளக்ஸ் பேனர்களை அந்தந்த அரசியல் கட்சியினரே தாமாக முன்வந்து அகற்ற வேண்டும். இல்லையெனில், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் அடங்கிய குழுவினர்களால் அகற்றி, அதற்கான செலவினம் கட்சிக்கணக்கில் வைக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
இதன்பின், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான கூட்டம் நடந்தது. வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முக்கிய பிரமுகர்களின் பெயர் பட்டியல் மற்றும், 85 வயதுக்கு மேற்பட்டோர் பட்டியல், இறந்தவர்கள் மற்றும் முகவரி மாறிச் சென்றவர்கள் பட்டியல் வழங்க வேண்டும். வாக்காளர்களின் வீடு தேடிச் சென்று, பூத் சிலிப் வழங்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் பங்கேற்றனர்.
தேர்தல் கட்டுப்பாடு அறை திறப்பு
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முதல் தளத்தில், வரவேற்பு தாசில்தார் பிரிவு செயல்பட்ட அறை, மாவட்ட கட்டுப்பாட்டு அறையாக மாற்றப்பட்டு உள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் வகையில், மூன்று ஷிப்ட் முறையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கட்டுப்பாட்டு அறைக்கு, 18004251215 என்கிற இலவச எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டு, தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். இங்குள்ள பணியாளர்கள், சம்பந்தப்பட்ட தொகுதிக்கு உட்பட்ட அலுவலர்களுக்கு தெரிவித்து, நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துவர்.

