/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை வனக்கோட்டத்தில் 200 கிலோ மீட்டருக்கு தீத்தடுப்பு கோடுகள்
/
கோவை வனக்கோட்டத்தில் 200 கிலோ மீட்டருக்கு தீத்தடுப்பு கோடுகள்
கோவை வனக்கோட்டத்தில் 200 கிலோ மீட்டருக்கு தீத்தடுப்பு கோடுகள்
கோவை வனக்கோட்டத்தில் 200 கிலோ மீட்டருக்கு தீத்தடுப்பு கோடுகள்
ADDED : பிப் 14, 2024 02:40 AM

மேட்டுப்பாளையம்:கோவை வனக்கோட்டத்தில் வனப்பகுதியில் ஏற்படும் தீ விபத்துகளை தடுக்க 200 கிலோ மீட்டர் தூரம் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன என கோவை மாவட்ட வன அலுவலர் தெரிவித்தார்.
கோவை வனக்கோட்டத்தில் கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை என 7 வனச்சரகங்கள், 670 சதுர கி.மீ.,பரப்பில் அமைந்துள்ளன.
இங்கு புலி, யானை, மான், சிறுத்தை, கரடி, செந்நாய், காட்டுமாடு, காட்டுபன்றி, குள்ளநரி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள், பறவை இனங்கள் உள்ளன.
கோடைகாலம் தொடங்க உள்ள நிலையில், வனத்தில் கடுமையான வறட்சி நிலவ வாய்ப்புள்ளது. வெயிலின் தாக்கத்தினால் காய்ந்த இலைகள், செடிகள் போன்றவற்றால் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதே போல் சமூக விரோதிகளால் காய்ந்த புற்கள் மீது தீ பற்ற வைக்கவும் வாய்ப்புஉள்ளது.
இதனை தடுக்க கோவை மாவட்ட வனத்துறை சார்பில், தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக 3 முதல் 6 மீட்டர் அகலம் வரை வனப்பகுதியில் உள்ள சாலையோரங்களில் காய்ந்த செடிகள், புற்கள் வெட்டப்பட்டு வருகின்றன.
மேலும், மலைகிராமங்களிலும், வனப்பகுதிகள் வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடமும் வனப்பகுதியில் ஏற்படும் தீ விபத்துகள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், கோவையில் உள்ள 7 வனச்சரகங்களிலும் தீத்தடுப்பு கோடுகள் தீவிரமாக அமைக்கப்பட்டு வருகின்றன. சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் வரை வனப்பகுதியில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட உள்ளன. இதனால் கோடை காலத்தில் வனப்பகுதியில் ஏற்படும் தீ விபத்துகளை தடுக்க முடியும், என்றார்.

