/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எள் சாகுபடியில் அதிக மகசூல் எடுக்கணுமா? வேளாண் இணை இயக்குனர் அறிவுரை
/
எள் சாகுபடியில் அதிக மகசூல் எடுக்கணுமா? வேளாண் இணை இயக்குனர் அறிவுரை
எள் சாகுபடியில் அதிக மகசூல் எடுக்கணுமா? வேளாண் இணை இயக்குனர் அறிவுரை
எள் சாகுபடியில் அதிக மகசூல் எடுக்கணுமா? வேளாண் இணை இயக்குனர் அறிவுரை
ADDED : மே 23, 2024 02:12 AM
பொள்ளாச்சி: ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையைப் பின்பற்றி, எள் சாகுபடி செய்தால் அதிக மகசூல் பெறலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை வேளாண் இணை இயக்குனர் பெருமாள்சாமி அறிக்கை வருமாறு:
எள் பயிர், எண்ணெய் வித்துப் பயிர்களின் அரிசி என்று அழைக்கப்படுகிறது. எள், ஒரு வெப்ப மண்டலப் பயிராக இருப்பதால், நிலத்தடியில் எஞ்சியுள்ள ஈரத்தன்மையை பயன்படுத்தி வறட்சியை தாங்கி வளரும் தன்மை உடையது.
இதன் வேர், மண் அமைப்பை மாற்றம் செய்வதால் நீர்ப்பிடிப்புத் தன்மையும் அதிகரிக்கும்.இது, மாசிப் பட்டம், ஆடிப் பட்டம் மற்றும் மார்கழி பட்டத்துக்கு ஏற்ற சாகுபடியாகும். அதன்படி, ஒரு ெஹக்டேருக்கு, 5 கிலோ விதை போதும்.
விதைக்கும் முன், அசோஸ்பைரில்லம், 100 மி., மற்றும் பாஸ்போ பாக்டீரிய 100 மி.,யுடன் நன்கு கலந்து, நிழலில் உலர்த்தி பின் விதைக்கலாம். ரசாயன முறையில் ஒரு கிலோ விதைக்கு, கார்பன்டாசிம் 2 கிராம் கலந்து விதைக்கலாம்.
குறிப்பாக, செடிகளுக்கு இடையே 30 செ.மீ.,; வரப்புகளுக்கு இடையே, 30 செ.மீ., இடைவெளியில், ஒரு சதுரமீட்டருக்கு, 11 செடிகள் இருக்குமாறு அமைக்க வேண்டும்.
விதைத்த, 15 நாட்களுக்குள் குறைந்த எண்ணிக்கையில் முளைத்த பயிர்களுக்கு இடைவெளி நிரப்புதல், விதைக்கும் முன் நிலத்தை, 3 முதல் 4 முறை நன்கு உழுதல், கடைசி உழவின் போது மக்கிய தொழு எரு, 12.5 டன் அல்லது மண்புழு உரம், 12.5 டன் இட வேண்டும்.
விதைத்த, 25 நாட்களுக்கு பின் கைகளால் களை எடுக்க வேண்டும். இல்லையெனில், பெண்டிமெத்தலின் ஒரு லிட்டர் மருந்தை, 200 லிட்டர் தண்ணீரில் கலந்து, நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.
மண் பரிசோதனை பரிந்துரையின் படி உரமிட வேண்டும். அல்லது ஒரு ஏக்கருக்கு. 14:9:9 கிலோ தழைச்சத்து (யூரியா 30 கிலோ), மணிச்சத்து (சூப்பர் பாஸ்பேட் 60 கிலோ) மற்றும் சாம்பல் சத்து (8 கிலோ) என்ற அளவில் உரமிட வேண்டும்.
இறவை மற்றும் மானாவாரி பயிருக்கு முழு அளவு தழை, மணி, சாம்பல் சத்து உரங்களை அடி உரமாக இட வேண்டும். ெஹக்டேருக்கு அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா தலா, 500 மில்லி உயிர் உரங்களை அடி உரமாக இடலாம். இதனால் கால்பங்கு தழைச்சத்து அளிப்பதை குறைத்துக் கொள்ளலாம்.
ஏக்கருக்கு, 5 கிலோ மாங்கனிஸ் சல்பேட்டை, 20 கிலோ மணலுடன் கலந்து நிலத்தில் துாவுவதன் வாயிலாக மாங்கனீஸ் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யலாம். எள் விதைத்த, 30 மற்றும் 50ம் நாள், ஏக்கருக்கு, 20 கிராம் சாலிசிலிக் அமிலத்தை, 200 லிட்டர் நீரில் கலந்து தெளிப்பதன் வாயிலாக, 20 சதவீதம் மகசூலை அதிகரிக்கலாம்.
தளிர் பிணைக்கும் புழுக்கள் மற்றும் எள் காய் ஈயை கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 400 மி.லி, குயினால்பாஸ் 25 இ.சி., மருந்தை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்கலாம். வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் (அ) டிரைக்கோடெர்மா எதிர் உயிரி பூஞ்சாணக்கொல்லி மருந்தை, 20 கிலோ மணலுடன் கலந்து விதைத்த, 30ம் நாள் மண்ணில் இடலாம்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

