/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர் குழாய் பதிக்கும் பணி பாதியில் நிறுத்தம் எஸ்டேட் மக்கள், வாகன ஓட்டுநர்கள் தவிப்பு
/
குடிநீர் குழாய் பதிக்கும் பணி பாதியில் நிறுத்தம் எஸ்டேட் மக்கள், வாகன ஓட்டுநர்கள் தவிப்பு
குடிநீர் குழாய் பதிக்கும் பணி பாதியில் நிறுத்தம் எஸ்டேட் மக்கள், வாகன ஓட்டுநர்கள் தவிப்பு
குடிநீர் குழாய் பதிக்கும் பணி பாதியில் நிறுத்தம் எஸ்டேட் மக்கள், வாகன ஓட்டுநர்கள் தவிப்பு
ADDED : ஆக 10, 2024 03:10 AM

வால்பாறை:புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டதால், எஸ்டேட் தொழிலாளர்களும், வாகன ஓட்டுநர்களும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
வால்பாறை நகருக்கு 8 கி.மீ., தொலைவில் உள்ள அக்காமலை செக் டேமிலிருந்து, குழாய் வாயிலாக தண்ணீர் குடிநீர் தொட்டியில் தேக்கி வைத்த பின், வீடு மற்றும் கடைகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
வால்பாறையில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாட்டால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
பழைய குடிநீர் குழாய் அடிக்கடி பழுதடைந்த நிலையில் காணப்படுவதால், நகரில் குடிநீர் தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை.
இதனிடையே, குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், அக்காமலை செக் டேமிலிருந்து, வால்பாறை நகர் வரை பழைய குடிநீர் குழாய்களை மாற்றி, புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. ஆனால் பணி ஆமை வேகத்தில் நடப்பதாலும், குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழி மூடப்படாமல் உள்ளதாலும் எஸ்டேட் தொழிலாளர்களும், வாகன ஓட்டுநர்களும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
எஸ்டேட் தொழிலாளர்கள் கூறியதாவது:
புதிய குடிநீர் குழாய் பதிப்புக்காக கருமலை, பச்சமலை, நடுமலை ஆகிய எஸ்டேட் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ரோட்டை சேதப்படுத்தி, குழி தோண்டி குழாய் பதித்தபின் மூடாமல் விட்டுவிட்டனர்.
இதனால் இரவு நேரங்களில், பஸ்சை விட்டு வீட்டிற்கு நடந்து செல்லும் தொழிலாளர்கள் தவறி விழுந்து காயமடைந்துள்ளனர். நகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால், தொழிலாளர்கள் நடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
இது குறித்து நாங்கள் பல முறை புகார் தெரிவித்தும், நகராட்சி அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடிநீர் குழாய் பதிப்பினால் எஸ்டேட் தொழிலாளர்கள் படும் கஷ்டத்தை அதிகாரிகள் புரிந்து கொண்டு, தோண்டப்பட்ட குழியை உடனடியாக மூடப்பட வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
வால்பாறை நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'வால்பாறை நகர் பகுதி மக்களின் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 8 கி.மீ., துாரத்திற்கு புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மழையின் காரணமாக, பணி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எஸ்டேட் பகுதியில் தோண்டப்பட்ட குழிகள் மூட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

