/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊரெல்லாம் குப்பை; சுகாதாரம் போயேபோச்சு! ஊராட்சி அலட்சியத்தால் பொதுமக்கள் அதிருப்தி
/
ஊரெல்லாம் குப்பை; சுகாதாரம் போயேபோச்சு! ஊராட்சி அலட்சியத்தால் பொதுமக்கள் அதிருப்தி
ஊரெல்லாம் குப்பை; சுகாதாரம் போயேபோச்சு! ஊராட்சி அலட்சியத்தால் பொதுமக்கள் அதிருப்தி
ஊரெல்லாம் குப்பை; சுகாதாரம் போயேபோச்சு! ஊராட்சி அலட்சியத்தால் பொதுமக்கள் அதிருப்தி
ADDED : மே 23, 2024 02:13 AM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுவதில்லை என, பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் ஊராட்சி, ஐந்து கிராமங்களை கொண்டது. இந்த ஊராட்சியில், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இங்கு குப்பை பிரச்னை பெரும் பிரச்னையாக உள்ளது.
ஒரு சில குடியிருப்பு பகுதியில், துாய்மை பணியாளர்கள் சென்று குப்பை சேகரிப்பது இல்லை, என, மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மற்ற பகுதியில் சேகரிக்கப்படும் குப்பையை, மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து அகற்றப்படுவதில்லை. இதற்கு மாற்றாக ஆங்காங்கே குப்பையை தேக்கி வைக்கின்றனர்.
தேக்கி வைக்கும் குப்பையை உடனடியாக அகற்றாமல் மாதக்கணக்கில் அப்படியே குவித்து வைக்கின்றனர். இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும், குப்பையை கிராமப்புற ரோட்டின் ஓரம், அரசு துணை சுகாதார நிலையம் எதிரிலும், தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள நீரோடை உள்ளிட்ட பல இடங்களில் குவித்துள்ளனர்.குப்பையை முறையாக அகற்றாததால், குப்பையுடன் மழைநீர் கலந்து ரோட்டில் வழிந்தோடி கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் ரோட்டில் நடந்து செல்பவர்கள் மற்றும் பைக் ஓட்டுநர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
குப்பை தரம் பிரிக்காமல் இருப்பதால், பிளாஸ்டிக் கவர்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், டெங்கு கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, நல்லட்டிபாளையம் ஊராட்சியில் குப்பை பிரச்னை அதிகரித்து வருகிறது. குப்பையை தரம் பிரித்து அகற்றம் செய்ய ஊராட்சி நிர்வாகத்தால் தற்போது வரை இடம் தேர்வு செய்ய முடியவில்லை.
மேலும், கடந்த 2023ம் ஆண்டு குப்பை கொட்ட இடம் தேர்வு செய்யப்படும் என ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அதுவும் பொய்த்து போனது.
திடக்கழிவு மேலாண்மைக்காக, நல்லட்டிபாளையத்தில் தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த இடத்தில் குப்பை தரம் பிரிப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. பெயருக்கு ஒரு தகர கூடாரம் மட்டுமே உள்ளது.
சில ஊராட்சிகளில் மக்களே குப்பையை தரம் பிரித்து வழங்குகின்றனர். ஆனால் இந்த ஊராட்சியில், பொது இடத்தில் உள்ள குப்பையை அகற்றம் செய்ய வேண்டுமென, ஊராட்சி நிர்வாகத்துடன் மக்கள் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் நலனில் கவனம் செலுத்தி, கிராமத்தின் சுகாதாரத்தை பாதுகாக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

