/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சோலையாறு அணை புனரமைப்பு பணி ரூ.106 கோடியில் நடக்கிறது
/
சோலையாறு அணை புனரமைப்பு பணி ரூ.106 கோடியில் நடக்கிறது
சோலையாறு அணை புனரமைப்பு பணி ரூ.106 கோடியில் நடக்கிறது
சோலையாறு அணை புனரமைப்பு பணி ரூ.106 கோடியில் நடக்கிறது
ADDED : மே 16, 2024 11:50 PM

பொள்ளாச்சி:வால்பாறை அடுத்துள்ள, சோலையாறு அணையை பலப்படுத்தும் வகையில், புனரமைப்பு பணிகள், 106 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகின்றன.
பி.ஏ.பி., திட்டத்தின் முக்கிய அணையாக, வால்பாறை அருக சோலையாறு அணை உள்ளது. சோலையாறு அணையின் நீர்பிடிப்பு பகுதி, 37 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.
இந்த அணையில், அதிகபட்சமாக, 165 அடி வரை நீர் இருப்பு வைக்க முடியும். ஆனால், அணை பாதுகாப்பு கருதி 160 அடி உயரத்துக்கு நீர்மட்டம் உயர்ந்ததும், சேடல்டேம் வழியாக தண்ணீர் வழிந்து, பரம்பிக்குளம் அணைக்கு செல்லும் வகையில் கட்டமைப்பு உள்ளது.
அணை பகுதியில், இரண்டு மின் நிலையங்கள் உள்ளன. அதில், சோலையாறு மின் நிலையம் - -1 இயக்கப்பட்டு, 84 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு, தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு வெளியேற்றப்படுகிறது.
சோலையாறு மின் நிலையம்- - 2 இயக்கப்பட்டு, 16 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு, ஒப்பந்தப்படி கேரளாவிற்கு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.தமிழக - கேரள மாநில அரசுகளிடையே ஒப்பந்தம் அடிப்படையில் அமைக்கப்பட்ட சோலையாறு அணை, தமிழகத்தின் உயரமான அணையாக கருதப்படுகிறது. அணை கட்டப்பட்டு, 50 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் பழமை மாறாமல் உள்ளது.
இந்நிலையில், வால்பாறையில், 106 கோடி ரூபாய் செலவில், சோலையாறு அணையை பலப்படுத்தும் வகையில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அணை நீர்மட்டம் முழு கொள்ளளவு எட்டியதுடன், நீர்மட்டம், 100 அடிக்கு குறையாமல் இருந்ததால் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வதில் இடையூறு ஏற்பட்டது. கடந்தாண்டு பருவமழை போதியளவு பெய்யாததால், அணை நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதையடுத்து, பணிகள் துவங்கப்பட்டு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அணையின் நீர் கசிவு கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பூங்கா பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சோலையாறு அணை புனரமைப்பு பணிகள், கடந்த, இரண்டு ஆண்டுகளாக மேற்கொள்ளப்படுகிறது. நடப்பாண்டு அல்லது வரும் ஆண்டுக்குள் முழு அளவில் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது,' என்றனர்.

