/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேட்டுப்பாளையம்--திருச்செந்துார் இடையே ரயில் இயக்க வேண்டுகோள்
/
மேட்டுப்பாளையம்--திருச்செந்துார் இடையே ரயில் இயக்க வேண்டுகோள்
மேட்டுப்பாளையம்--திருச்செந்துார் இடையே ரயில் இயக்க வேண்டுகோள்
மேட்டுப்பாளையம்--திருச்செந்துார் இடையே ரயில் இயக்க வேண்டுகோள்
ADDED : மே 22, 2024 10:55 PM
மேட்டுப்பாளையம்: கோடை விடுமுறைக்கு தென் மாவட்டங்கள் செல்வோர் அதிகரிப்பால், மேட்டுப்பாளையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் கோவை-மேட்டுப்பாளையம் இடையே மெமு ரயில், சென்னைக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. வாரம் ஒருமுறை திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
தற்போது கோடை விடுமுறை என்பதால் தென் மாவட்டங்கள் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே போல் ஜூன் மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கும் போது, தென் மாவட்டங்கள் சென்றோர் அங்கிருந்து கோவை மாவட்டத்திற்கு வருவார்கள்.
தென் மாவட்டங்களுக்கு கோவையில் இருந்தும், மேட்டுப்பாளையத்தில் இருந்தும் அதிக அளவில் ரயில்கள் இயக்கப்படுவது இல்லை. இதனால் பயணிகளின் நலன் கருதி மேட்டுப்பாளையம் - திருச்செந்தூர் இடையே ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து ரயில் நல பயணிகள் சங்கம் (கோவை, திருப்பூர், திண்டுக்கல்) மாவட்டங்களின் ஒருங்கிணைந்த செயலாளர் மோகன் கூறியதாவது: கோவை மாவட்டத்திற்கு தொழில் நிமித்தமாக தென் மாவட்டங்களில் இருந்து தினமும் பல நூறு பேர், வந்து செல்கின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் தென் மாவட்டங்களுக்கு கோவை மாவட்டத்தில் இருந்து செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மேட்டுப்பாளையம்- - திருச்செந்தூர் இடையே ரயில் இயக்கினால், பயணிகள் பெரிதும் பயன்பெறுவார்கள். மேட்டுப்பாளையம் -- திருநெல்வேலி இடையே வாரம் ஒருமுறை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் பல ஆயிரம் மக்கள் பயன் அடைந்து வருகிறார்கள். இதே போல் மேட்டுப்பாளையம் - - திருச்செந்தூர் இடையே ரயில் இயக்கினால் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து பழனி, திருச்செந்தூருக்கு ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் அதிகம். இவர்கள் தற்போது பாலக்காடு - திருச்செந்தூர் ரயிலில் திருச்செந்தூருக்கு சென்று வருகின்றனர். அதற்கு இவர்கள் பொள்ளாச்சி சென்று ரயிலில் பயணிக்கும் நிலை உள்ளது.
மேட்டுப்பாளையம் - திருச்செந்தூர் இடையே ரயில் இயக்கினால், நீலகிரி மற்றும் கோவை மாவட்டம் அன்னூர், மேட்டுப்பாளையம், காரமடை, பெரியநாயக்கன்பாளையம் என சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்களும் பயன்பெறுவார்கள்.---

