/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராகுல், ஸ்டாலின் பயணிக்க ஸ்பெஷல் ரோடு! தேர்தல் செலவு கணக்கில் சேர்க்க உறுதி
/
ராகுல், ஸ்டாலின் பயணிக்க ஸ்பெஷல் ரோடு! தேர்தல் செலவு கணக்கில் சேர்க்க உறுதி
ராகுல், ஸ்டாலின் பயணிக்க ஸ்பெஷல் ரோடு! தேர்தல் செலவு கணக்கில் சேர்க்க உறுதி
ராகுல், ஸ்டாலின் பயணிக்க ஸ்பெஷல் ரோடு! தேர்தல் செலவு கணக்கில் சேர்க்க உறுதி
ADDED : ஏப் 14, 2024 01:09 AM

கோவை:கோவையில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்துக்கு ராகுல், ஸ்டாலின் ஆகியோர் வருவதற்காக, ஸ்பெஷலாக ரோடு போடப்பட்டிருந்தது. இதற்கு செலவிட்ட தொகை, தேர்தல் செலவின கணக்கில் சேர்க்கப்படும் என, தேர்தல் அலுவலர் உறுதி கூறியுள்ளார்.
கோவை, பொள்ளாச்சி மற்றும் கரூர் தொகுதிகளில் போட்டியிடும் தி. மு.க., கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக, தி.மு.க., சார்பில், கோவை எல் அண்டு டி பைபாஸில் செட்டிபாளையம் அருகே தேர்தல் பொதுக்கூட்டம், நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்டது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர்.
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்த முதல்வர் ஸ்டாலின், விமான நிலையத்தில் இருந்து காரில், ஹோப்ஸ் காலேஜ், சிங்காநல்லுார், வெள்ளலுார் வழியாக செட்டிபாளையம் வந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் சூலுார் வழியாக திருப்பூர் சென்றார்.
இக்கூட்டத்துக்கு, திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானத்தில் ராகுல் கோவை வந்தார். இவரும், ஸ்டாலின் சென்ற வழித்தடத்திலேயே காரில் பயணித்தார்.
இவ்விருவர் பயணத்துக்காக, வெள்ளலுார் ரோட்டில் ஆங்காங்கே இருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டு இருந்தன. குண்டும் குழியுமாக இருந்த ரோடுகள் சீரமைக்கப்பட்டு, 'பேட்ச் ஒர்க்' செய்யப்பட்டு இருந்தன.
வெள்ளலுாரில் இருந்து செட்டிபாளையம் செல்ல, இரு வழித்தடங்கள் தயார் செய்யப்பட்டு இருந்தன. வெள்ளலுார் கறிக்கடை பஸ் ஸ்டாப் பகுதியில் புதிதாக ரோடு போடப்பட்டு இருந்தது.
பைபாஸ் சந்திக்கும் இடத்தில் இருந்து, பொதுக்கூட்ட மேடைக்கு செல்லும் வரையிலான துாரத்துக்கு ஸ்பெஷலாக புதிதாக ரோடு போடப்பட்டு, இரு புறமும் இரும்பு கிரில் தடுப்பு வைக்கப்பட்டு இருந்தது. இரு தலைவர்கள் மட்டும் செல்வதற்காக, இந்த ரோடு போடப்பட்டு இருந்தது.
இந்த ரோடு யார் போட்டது என்கிற கேள்வி எழுந்தது. அரசு தரப்பில் போடப்பட்டு இருந்தால், தேர்தல் விதிமீறலாகும்.
இது குறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமாரிடம் கேட்டபோது அவர், ''எல் அண்டு டி பைபாஸ் அருகே, அரசு சார்பில் ரோடு போடவில்லை. நிகழ்ச்சி நடத்தியவர்கள், அதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்திருக்கின்றனர்.
இந்திய தேர்தல் ஆணைய விதிமுறையை பின்பற்றி, செலவினங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்,'' என்றார்.

