/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பவானி ஆற்றில் போலீசார் கண்காணிப்பு
/
பவானி ஆற்றில் போலீசார் கண்காணிப்பு
ADDED : மே 16, 2024 10:38 PM

மேட்டுப்பாளையம்:பவானி ஆற்று படுகையில், 20 இடங்களில் லைப் கார்டு போலீசார், ஆற்றில் யாரேனும் குளிக்கின்றனரா என, ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பில்லூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர், பவானி ஆறு வழியாக, பவானிசாகர் அணைக்கு செல்கிறது. நெல்லித்துறை அருகே விளாமரத்தூரில் இருந்து, சிறுமுகை அருகே மூலையூர் வரை, ஏராளமான இடங்களில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பவானி ஆற்றில் குளிக்கின்றனர்.
இந்த நிலையில் தண்ணீரில் மூழ்கி இறப்பவர்களை காப்பாற்றும் வகையில், கோவை ரூரல் எஸ்.பி.,பத்ரி நாராயணன், 'லைப் கார்டு' என்ற புதிய போலீஸ் டீமை உருவாக்கினார். இதற்கு ஒரு எஸ்.ஐ., நீச்சல் தெரிந்த பத்து போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆற்றில் நீர்வரத்து இல்லாததால், ஆங்காங்கே குழிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் குளித்தவர்களில் சிலர் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். அதனால் மாவட்ட கலெக்டர், ஆறு, குளம், குட்டைகள் ஆகியவற்றில் குளிக்க தடை விதித்தார்.
இதைத் தொடர்ந்து லைப் கார்டு போலீசார், ஆற்றின் கரையோரம் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில்,கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள், ஆற்றில் துணி துவைப்பவர்களை விரைவில் துணி துவைத்து விட்டு, ஆற்றிலிருந்து வெளியேறும்படி கூறி வருகின்றனர். புதிதாக யாரேனும் ஆற்றில் குளித்தால் அவர்களை ஆற்றிலிருந்து வெளியேறும்படி, போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து சப் இன்ஸ்பெக்டர் ராஜன் கூறுகையில், 'நெல்லித்துறையில் இருந்து மேட்டுப்பாளையம், சிறுமுகை வரை, 20 இடங்களில் பொதுமக்கள் ஆற்றில் குளிக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடங்களில் நாங்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம்' என்றார்.

