/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில் நிதியில் இழைக்கப்படும் குற்ற செயல்கள்
/
கோவில் நிதியில் இழைக்கப்படும் குற்ற செயல்கள்
ADDED : ஏப் 29, 2024 01:23 AM

பொள்ளாச்சி;'தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான அசையும், அசையா சொத்துகள், கோவில் நிதிகளில் அரசு அதிகாரிகளால் இழைக்கப்படும் குற்ற செயல்களை கண்டறிந்து வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும். ,'' என, ஆன்மிக விழாவில், முன்னாள் ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் பேசினார்.
சிவனடியார்கள், முருக பக்தர்கள், அனைத்து ஆன்மிக அன்பர்களையும் ஒருங்கிணைக்கும் ஆன்மிக விழா, பொள்ளாச்சி கே.கே.ஜி., திருமண மண்டபத்தில் நடந்தது.
முன்னாள் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் பேசிய தாவது: தமிழகத்தில் உள்ள கோவில்கள் சம்பந்தமாக எழும் போது பிரச்னைகளுக்கு ஒவ்வொரு அமைப்பு, இயக்கங்களும், மற்ற அமைப்புகளுடன் இருக்கும் கருத்து வேறுபாடுகளை மறந்து பொது நோக்கம் அடிப்படையில் ஒன்று சேர்ந்து எதிர்ப்பை தெரிவித்து ஒத்த நோக்கத்துடன் செயல்பட்ட வெற்றி பெற வேண்டும்.
பிரச்னைகள் வரும் போதும், போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போது, பக்தர்கள், அவர்களது வீடுகள் முன்பு, கறுப்பு கொடி கட்டி எதிர்ப்பினை காட்ட வேண்டும். அவ்வாறு செய்யும் போது, தமிழக அரசு யோசிக்க வைக்க முடியும். தமிழகத்தில், 38,658 கோவில்களுக்கு சொந்தமான அசையும், அசையா சொத்துகள், கோவில் நிதிகளில் அரசு அதிகாரிகளால் இழைக்கப்படும் குற்ற செயல்களை கண்டறிந்து வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும்.
அமெரிக்காவின் வாஷிங்கடனில் உள்ள இந்திய துாதரக அலுவலகத்தில் அமெரிக்க அரசால் ஒப்படைக்கப்பட்ட, 1,141 தெய்வ விக்ரகங்கள் மற்றும் கலைப்பொருட்களை புதுடில்லி கொண்டு வந்து அவைகளுக்கு உரிய அந்தந்த மாநிலங்களுக்கு ஒரு மாதத்துக்குள் ஒப்படைக்க வேண்டும்.
சென்னையில் நடைபெறும் கவன ஈர்ப்பு கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
திருச்சியை சேர்ந்த ரங்கராஜன், அவிநாசி ஆதீனம் கமாட்சி தாச சுவாமி, தென்சேரி மலை முத்துசிவராமசாமி சுவாமிகள் உள்ளிட்ட ஆன்மிக பெரியோர், ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், ஹிந்து தமிழர் அமைப்பு, ஆலயம் காப்போம், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

