/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விடுபட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் பருவ மழைக்கு முன்பே முடிக்க தீவிரம்
/
விடுபட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் பருவ மழைக்கு முன்பே முடிக்க தீவிரம்
விடுபட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் பருவ மழைக்கு முன்பே முடிக்க தீவிரம்
விடுபட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் பருவ மழைக்கு முன்பே முடிக்க தீவிரம்
ADDED : மார் 28, 2024 03:43 AM
கோவை : ரயில்வே பாலங்கள் அமைந்துள்ள எட்டு இடங்களில் மழை கால பாதிப்புகளை தவிர்க்கும் பொருட்டு, திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.
மாநகராட்சி பகுதிகளில் போதிய வடிகால் கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் மழை காலங்களில் பெரும் சிரமங்களை மக்கள் சந்திக்க வேண்டியுள்ளது. சிறிது நேரம் மழை பெய்தாலே ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுப்பதுடன், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்து பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.
இதையடுத்து, விடுபட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கவும், இயற்கை வடிகால்களை மேம்படுத்தவும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இத்திட்ட அறிக்கையானது அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, உரிய நிதி பெற்று பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மழைக் காலங்களில் குறிப்பாக ரயில்வே பாலங்கள் உள்ள பகுதிகளில் வாகனங்கள் சிக்கிக்கொள்கின்றன. லங்கா கார்னர், கிக்கானி பள்ளி அருகே இப்பிரச்னை தொடர்கதையாக உள்ளது.
இதையடுத்து, ரயில்வே பால பகுதிகளில் மழைநீரை விரைவாக வெளியேற்றும் பொருட்டு திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ரயில்வே பாலங்களுக்கு கீழ் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி மக்களுக்கும், போக்குவரத்துக்கும் பெரும் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. இதற்கு தீர்வு காண, திட்ட ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
அவிநாசி ரோடு மேம்பாலம், கிக்கானி பள்ளி அருகே, சிவானந்தா காலனி சி.டி.சி., டிப்போ அருகே, லங்கா கார்னர், நீலிக்கோணம்பாளையம் ரயில்வே பாலம், எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி மேம்பாலம், 58வது வார்டில் பட்டணம் இட்டேரி சாலை, 28வது வார்டில் உள்ள ஷோபா நகர் ரயில்வே பாலம் ஆகிய இடங்களில், மழைநீரை வெளியேற்றும் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
திட்ட அறிக்கை பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரசிடம் நிதி கிடைத்தவுடன் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படும். பருவ மழைக்கு முன்பே மழைநீர் வடிகால் கட்டமைப்பு பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.

