/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பை அள்ளும் எலக்ட்ரிக் ஆட்டோ; மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
/
குப்பை அள்ளும் எலக்ட்ரிக் ஆட்டோ; மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
குப்பை அள்ளும் எலக்ட்ரிக் ஆட்டோ; மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
குப்பை அள்ளும் எலக்ட்ரிக் ஆட்டோ; மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
ADDED : ஆக 29, 2024 10:46 PM

கோவை : கோவையில் குறுக்கு வீதிகளுக்குள் சென்று குப்பை சேகரிக்க வழங்கப்பட்ட எலக்ட்ரிக் ஆட்டோக்களின் தற்போதைய நிலையை, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று ஆய்வு செய்தார்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், குறுகிய வீதிகளில் குப்பையை தரம் பிரித்து சேகரிப்பதற்காக, 100 எலக்ட்ரிக் ஆட்டோ வாங்கப்பட்டன. வார்டுக்கு ஒன்று வீதம் வழங்கப்பட்டது. அவற்றில் ஆறு பெட்டிகள் வைத்து, குப்பை சேகரிக்கப்பட்டது. ஒவ்வொரு வாகனத்துக்கும் வழித்தடம் இறுதி செய்யப்பட்டு, ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டது. எந்தெந்த வீதிகளில் குப்பை வாங்க வேண்டுமென துாய்மை பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. ஆனால், சின்ன சின்ன பழுது ஏற்பட்டாலும், அவற்றை சரி செய்யாமல், ஏதேனும் ஓரிடத்தில் ஓரங்கட்டி நிறுத்தி விடுகின்றனர்.
மாநகராட்சி மண்டல கூட்டங்களில், வார்டுக்கு குப்பை அள்ள வண்டி வருவதில்லை; 'ரிப்பேர்' என சொல்கின்றனர். மலை போல் குப்பை தேங்கியிருப்பதாக, கவுன்சிலர்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். இதைத்தொடர்ந்து, அனைத்து எலக்ட்ரிக் வாகனங்களின் தற்போதைய நிலையை அறிய, வ.உ.சி., மைதானத்துக்கு கொண்டு வர, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டார்.
அவற்றை பார்த்த கமிஷனர், ஆச்சரியப்பட்டு, ''இந்த வண்டியெல்லாம் வார்டுக்குள்ள ஓடுதா... ஒரு நாள் கூட இந்த வண்டிகளை பார்த்ததே இல்லையே... டயர் கூட தேயாம இருக்குதே...'' என கேட்டார்.
சில வண்டிகள் விபத்துக்குள்ளாகி நெளிந்திருந்தன. மூன்று வண்டிகள் மழையில் நனைந்து பழுதாகி விட்டதாக அலுவலர்கள் கூறினர். மொத்தம், 13 ஆட்டோக்கள் 'ரிப்பேராக' இருப்பது, இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது. அவற்றை உடனடியாக சரி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்; மீதமுள்ள வாகனங்களை முறையாக பராமரித்து, குப்பை சேகரிக்க பயன்படுத்த வேண்டுமென, சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

