ADDED : ஏப் 24, 2024 10:28 PM
கிணத்துக்கடவு : தென்னையில் குரும்பை உதிர்தலை கட்டுப்படுத்த, முறையான உர மேலாண்மையை பின்பற்ற வேளாண் பல்கலை பேராசியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
கிணத்துக்கடவு மற்றும் சுற்று வட்டார கிராமங்களில், கோடை காலம் என்பதால் தென்னைக்கு போதிய அளவு தண்ணீர் இல்லாமல் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு, வாடிய நிலையில் உள்ளன. இதில், முக்கியமாக தென்னையில் குரும்பை உதிர்தல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் ஆனந்தராஜா ஆலோசனை வழங்கியுள்ளார்.
அவர் கூறியதாவது:
தென்னை மரத்திற்கு, நுண்ணுாட்டம் மற்றும் பேரூட்டம் கொடுக்க வேண்டும். இதில், வீரிய ஒட்டு ரகங்களுக்கு, மூன்று மாதத்திற்கு ஒரு முறையும், நாட்டு ரகங்களுக்கு ஆறு மாதத்துக்கு ஒரு முறை நுண்ணுாட்டம் மற்றும் பேரூட்டம் கொடுக்க வேண்டும். இவைகள் இரண்டையும் தனித்தனியே கொடுப்பது அவசியம்.
ஒரு மரத்துக்கு, ஆண்டுக்கு பேரூட்டத்தில், யூரியா - 1.3 கிலோ, சூப்பர் பாஸ்போட் - 2 கிலோ, பொட்டாஷ் (சிகப்பு) - 3.5 கிலோ இடவேண்டும். மற்றும் நுண்ணுாட்டத்தில், தென்னை நுண்ணுாட்டம் - 1 கிலோ, தொழு உரம் - 50 கிலோ, வேப்பம் புண்ணாக்கு - 1 கிலோ இட வேண்டும்.
நுண்ணுாட்டம் மற்றும் பேரூட்டத்தை, ஜூன் - ஜூலை மற்றும் ஜனவரி - பிப்ரவரி மாதத்தில், ஆண்டுக்கு இரு முறை கொடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினார்.

