/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்தல் விதிமீறல்; அதிகாரியிடம் அ.தி.மு.க., மனு
/
தேர்தல் விதிமீறல்; அதிகாரியிடம் அ.தி.மு.க., மனு
ADDED : ஏப் 15, 2024 11:49 PM

பொள்ளாச்சி;'தி.மு.க., தேர்தல் விதிமுறை மீறல் குறித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என அ.தி.மு.க.,வினர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு கொடுத்தனர்.
பொள்ளாச்சி புது பஸ் ஸ்டாண்ட் அருகே, தி.மு.க., வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து ம.நீ.ம., தலைவர் கமலஹாசன், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பிரசாரம் செய்வதற்காக தி.மு.க., மற்றும் ம.நீ.ம., கட்சியினர் முன்னேற்பாடுகளை செய்தனர்.
அதில், தேர்தல் விதிமீறல் செய்துள்ளதாக அ.தி.மு.க., பொள்ளாச்சி நகர செயலாளர் கிருஷ்ணகுமார், அ.தி.மு.க., வக்கீல் பிரிவு நிர்வாகிகள் சார்பில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்திரின் சரண்யாவிடம் மனு வழங்கினர்.
மனுவில் கூறியிருப்பதாவது: பொள்ளாச்சி லோக்சபா தேர்தலில், தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து, நடிகர் கமல், அமைச்சர் உதயநிதி ஆகியோர் தெருமுனை பிரசாரம் செய்ய உள்ள இடம், இரண்டு பஸ் ஸ்டாண்டுகள் அமைந்துள்ள பகுதியாகும்.
பொதுமக்கள் அதிகமாக நடமாடும் பகுதியாகவும், வாகன போக்குவரத்து அதிகமாக உள்ள இடமாகவும் உள்ளது. இங்கு தெருமுனை பிரசாரம் செய்வதாக அனுமதி பெற்று, பொதுக்கூட்டம் போன்று கூட்டத்தை கூட்ட தி.மு.க.,வினர் துரிதமாக செயல்படுகின்றனர்.
இங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றால், பொள்ளாச்சி நகரமே ஸ்தம்பிக்க கூடிய சூழல் உள்ளது; பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும். இது தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பானதாகும். எனவே, தெருமுனை பிரசாரத்துக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ரவுண்டானா இடத்தில் பிரசாரத்துக்கு உண்டான விளம்பர பதாகைகள், மின்விளக்கு அமைப்பதற்கு உயரமான இரும்பு கம்பங்கள் பதிக்கப்பட்டு ஒலிபெருக்கி அமைக்கும் பணி நடக்கிறது.
இதனால், வாகன ஓட்டுநர்களுக்கு சுற்றுவட்ட பாதையில் செல்லும் வாகனங்கள் மறைக்கப்படுவதால், விபத்து ஏற்படும் சூழல் உண்டாகும். அனுமதியை ரத்து செய்து, பணியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

