/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா பறவைக்காவடி எடுத்து பக்தர்கள் பரவசம்
/
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா பறவைக்காவடி எடுத்து பக்தர்கள் பரவசம்
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா பறவைக்காவடி எடுத்து பக்தர்கள் பரவசம்
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா பறவைக்காவடி எடுத்து பக்தர்கள் பரவசம்
ADDED : ஏப் 23, 2024 10:02 PM

உடுமலை : உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த 9ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், நாளை நடக்கிறது.
திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கிரேன்களில், உடல் முழுவதும் அலகு குத்திக்கொண்டு, துாக்கு நேர்ச்சை காவடி, பறவை காவடி, இசைக்கருவிகள் இசைத்தவாறு வாத்தியகாவடி, மயில்காவடி என பல்வேறு வகையான காவடி எடுத்து வந்தனர். பஸ் ஸ்டாண்டில் துவங்கி, கோவில் வரை, வாகனங்களில் வண்ண விளக்கு அலங்காரத்தில், பறவைக்காவடி நிகழ்ச்சி நடந்தது.
மேலும், பக்தர்கள் முளைப்பாலிகையும் எடுத்து வந்தனர். மகா மாரியம்மன், காமாட்சி, மீனாட்சி, என அஷ்ட லட்சுமி அம்மன்களின் உருவாரங்கள் முளைப்பாலிகையில் அமைந்திருந்தது.
மேலும், 108 பெண்கள் முளைப்பாலிகையை ஊர்வலமாக எடுத்து வந்தனர். வாய் அலகு, நாக்கு அலகு, முதுகில் தேர் அலகு என, 21 பேர் பறவைக்காவடியாக கிரேன் வாகனத்தில், அலகு குத்தி, தொங்கியபடி வந்தது, மெய்சிலிர்க்கவைத்தது.
அதோடு, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், கோடந்துார் கட்டளை மாரியம்மன் கோவிலிருந்து, வன தேவதை தீர்த்தமாக, கோடந்துார் மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த, ஏழு சிறுமியர் தீர்த்தம் எடுத்து வந்தனர்.
முன்னதாக, ஊர்வலம் துவக்க விழா நடந்தது. உடுமலை சபரிமலை சபரிபார்ட்டி உழவாரப்பணி பேரவைத்தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவேந்திர குமார் மீனா துவக்கி வைத்தனர்.
கூனம்பட்டி கல்யாணபுரி ஆதினம் ராஜசரவண மாணிக்கவாசக சுவாமிகள், திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலயம் காமாட்சிதாச சுவாமிகள், பெரியநாயக்கன்பாளையம் ஸ்ரீவாராஹி மந்தராலயம் டிரஸ்ட் மணிகண்ட சுவாமிகள் மற்றும் நித்தியானந்தம், செவ்வேள், சஞ்சீவ் சுந்தரம், ராமகிருஷ்ணன், சிதம்பரசாமி, பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஐஸ்வர்யா நகர் விநாயகர் கோவில் அருகில், ஹிந்து தர்மாத்த சமிதி கிராம கோவில் பூஜாரிகள் பேரவை சார்பில், சமயபுரம் சக்தி ரதம் விஜயம் நடந்தது. இந்த ரதத்தில் எழுந்தருளியிருந்த அம்மனுக்கு நுாற்றுக்கணக்கான பெண்கள் ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தனர்.

