/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தனியார் கிணறுகளில் இருந்து நீர் எடுத்து விற்பனை :அதிகளவு எடுப்பதால் நிலத்தடி நீர் பாதிப்பு
/
தனியார் கிணறுகளில் இருந்து நீர் எடுத்து விற்பனை :அதிகளவு எடுப்பதால் நிலத்தடி நீர் பாதிப்பு
தனியார் கிணறுகளில் இருந்து நீர் எடுத்து விற்பனை :அதிகளவு எடுப்பதால் நிலத்தடி நீர் பாதிப்பு
தனியார் கிணறுகளில் இருந்து நீர் எடுத்து விற்பனை :அதிகளவு எடுப்பதால் நிலத்தடி நீர் பாதிப்பு
ADDED : ஏப் 25, 2024 11:39 PM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, தனியார் இடத்தில் உள்ள கிணறுகளில் இருந்து அதிகளவு நீர் எடுத்து வணிக பயன்பாட்டுக்கு விற்பனை செய்வதால், நகரப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால், அதிருப்தியடைந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட, 36 வார்டுகளில், 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நகரில், அம்பராம்பாளையம் ஆற்றில் இருந்து குடிநீரும், கிணறுகளில் இருந்து மாற்று பயன்பாட்டுக்கான நீரும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், நகரில் குடியிருப்பு பகுதியில் உள்ள தனியார் கிணறுகளில் இருந்து, லாரிகளில் தண்ணீர் எடுத்துச் சென்று விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு சில இடங்களில் மட்டும், இதுபோன்று நடந்தது. தற்போது, அதிகளவு குடிநீர் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், நகராட்சி விநாயகர் கோவில் வீதி, மரப்பேட்டை பகுதியில் தனியார் இடத்தில் இருந்து அதிகளவு நீர் எடுத்து, லாரிகளில் விற்பனை செய்வதால், கிணறுகள் வறண்டு விடும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி, அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட முயற்சித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். அப்போது, 'கோடைக்காலம் முடியும் வரை தண்ணீர் எடுக்காமல் இருக்க அறிவுறுத்தப்படும்; அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
விநாயகர் கோவில் வீதி அருகே தனியார் இடத்தில் உள்ள கிணற்றில், அதிகளவு நீர் எடுக்கப்பட்டு லாரிகளில் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. இதனால், அருகே நகராட்சிக்கு சொந்தமான பொதுக்கிணறு வறண்டு விடும் நிலை உள்ளது.
இங்குள்ள பொதுக்கிணறு வாயிலாக, விநாயகர் கோவில் வீதி, டீச்சர்ஸ் காலனி, நந்தனார் காலனி, குமரன் வீதி உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகளில் உள்ள, 5,000க்கும் மேற்பட்டோர் பயன்பெறுகின்றனர்.
மேலும், மரப்பேட்டை அருகே தனியார் இடத்தில் போர்வெல் அமைத்து, அந்த தண்ணீரை கிணற்றுக்குள் விட்டு டேங்கர் லாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர். அதிகளவு நீர் எடுக்கப்பட்டு, நாட்டுக்கல்பாளையம் வரை விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.
மழை இல்லாத சூழலில் கடும் வறட்சி நிலவுகிறது. இந்நிலையில், இதுபோன்று தண்ணீரை அளவுக்கு அதிகமாக எடுத்து விற்பனை செய்வதால் மேலும் பாதிப்பு ஏற்படும். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

