/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூடுதல் ரயில்கள் கோவைக்கு அவசியம் தேவை! தென் மாவட்ட மக்களின் தீர்க்கப்படாத கோரிக்கை
/
கூடுதல் ரயில்கள் கோவைக்கு அவசியம் தேவை! தென் மாவட்ட மக்களின் தீர்க்கப்படாத கோரிக்கை
கூடுதல் ரயில்கள் கோவைக்கு அவசியம் தேவை! தென் மாவட்ட மக்களின் தீர்க்கப்படாத கோரிக்கை
கூடுதல் ரயில்கள் கோவைக்கு அவசியம் தேவை! தென் மாவட்ட மக்களின் தீர்க்கப்படாத கோரிக்கை
ADDED : ஏப் 14, 2024 01:02 AM
-நமது சிறப்பு நிருபர்-
பல லட்சம் தொழிலாளர் குடும்பங்கள் பயன் பெறும் வகையில், கோவையிலிருந்து தென் மாவட்டங்களுக்குக் கூடுதல் ரயில்கள் இயக்குவதற்கு, வேட்பாளர்கள் வாக்குறுதி தர வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல லட்சம் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களின் எண்ணிக்கை, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பெரும்பாலானவர்கள், கீழ்த்தட்டு மற்றும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
குடும்ப நிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்கள் மற்றும் பல்வேறு சொந்தக் காரணங்களுக்காக, இவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கமாகவுள்ளது.
ரயில் மார்க்கமாக இவர்கள் செல்ல, கோவையிலிருந்தும், திருப்பூரில் இருந்தும் இரண்டு ரயில்கள் மட்டுமே, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படுகின்றன. பொள்ளாச்சி வழித்தடத்தில் மீட்டர் கேஜ் இருந்தபோது, அந்த வழியாக 5 ரயில்கள் இயக்கப்பட்டன.
அகல ரயில் பாதைப் பணிக்காக நிறுத்தப்பட்ட, அந்த ரயில்கள் மீண்டும் இயக்கப்படவே இல்லை.
அதேபோல, கோவையிலிருந்து ராமேஸ்வரம், திருச்செந்துார் போன்ற திருத்தலங்களுக்குச் செல்லும் பக்தர்களுக்கும், போதிய ரயில் வசதிகள் இல்லை. பல்லாயிரக்கணக்கான மக்கள், தினமும் அரசு மற்றும் ஆம்னி பஸ்களை, நம்பி பயணம் செய்கின்றனர்.
இதனால், போக்குவரத்து நெரிசல், விபத்துகள் அதிகரித்து வருகின்றன. பண்டிகை நாட்களில், பஸ்களில் இடம் கிடைப்பதும் கஷ்டமாகவுள்ளது. அதிகக் கட்டணம் கொடுத்து ஆம்னி பஸ்கள் மற்றும் வேன்களில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கூடுதல் ரயில்களை இயக்குவது மட்டுமே, இப்பிரச்னைகளுக்கு தீர்வு.
இன்றைய நிலையில், தமிழகத்திலேயே அதிக விபத்து உயிரிழப்புகளில் கோவை மாவட்டம் முதலிடத்தில் இருப்பதற்கு, பஸ்கள் அதிகமாக இயக்கப்படுவதும் ஒரு முக்கியக் காரணம்.
லோக்சபா தேர்தலையொட்டி, முக்கியக் கட்சியினர் புதிய ரயில்கள் இயக்கம் தொடர்பாக பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்து வருகின்றனர்.
இவற்றில், பா.ஜ., வேட்பாளரான அண்ணாமலையின் தேர்தல் அறிக்கை, இங்குள்ள தென் மாவட்ட மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
அந்த அறிக்கையில், கோவையில் இருந்து கன்னியாகுமரிக்கும், கோவையிலுள்ள கேரள மக்கள் நலனுக்காக, கொச்சி வழியாக திருவனந்தபுரத்துக்கும், வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.கோவை எக்ஸ்பிரஸ் ரயில் போல, கோவையிலிருந்து பொள்ளாச்சி, பழனி, மதுரை, திருநெல்வேலி ஆகிய நகரங்களுக்கு தினசரி ரயில் இயக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இவற்றுடன் தென் மாவட்ட மக்களுக்கும், பக்தர்களுக்கும் உதவும் வகையில், கோவையிலிருந்து காரைக்குடி வழியாகராமேஸ்வரத்துக்கும் வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இவை எல்லாவற்றையும் விட, விபத்து கேந்திரங்களாகவுள்ள அவினாசி (சேலம்) ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு மற்றும் பொள்ளாச்சி ரோடுகளில், வாகனப்போக்குவரத்தைக் குறைக்கும் வகையில், கோவையிலிருந்து உடுமலை, திருப்பூர்-ஈரோடு ஆகிய நகரங்களுக்கு, தினமும் 5-10 முறை, 3 அல்லது 4 பெட்டிகள் கொண்ட மெமு ரயில்களை இயக்க வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
அதேபோல, தற்போது கோவை, போத்தனுார் - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் ரயில்களின் சேவையையும், இன்னும் இரண்டு அல்லது மூன்று டிரிப்கள் அதிகரிக்க வேண்டும்.
அப்போது தான், கோவை - மேட்டுப்பாளையம் இடையே வாகனப்போக்குவரத்தைக் குறைக்க முடியும். இதுபற்றி, இவ்வளவு காலமாக பதவியில் இருந்த கோவை, நீலகிரி எம்.பி.,க்கள் வாய் திறந்ததேயில்லை.
வரப்போகும் புதிய எம்.பி.,க்களாவது, இதற்குக் குரல் கொடுத்து, கூடுதல் ரயில்களை இயக்குவதற்கு தீவிர முயற்சி எடுக்க வேண்டும்.
அதற்கு, அர்ப்பணிப்பும், ஆளுமையும் கொண்ட வேட்பாளர்களைத் தேர்வு செய்ய வேண்டியது, கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் பொள்ளாச்சி தொகுதி வாக்காளர்களின் தலையாய கடமையாகும்.

