/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேங்கும் நீரை அகற்ற வாகனம் வாங்க நிதி ஒதுக்கீடு
/
தேங்கும் நீரை அகற்ற வாகனம் வாங்க நிதி ஒதுக்கீடு
ADDED : ஜூலை 29, 2024 02:48 AM
அன்னுார்:தேங்கும் நீரை வெளியேற்ற பேரூராட்சிக்கு புதிய வாகனம் வாங்க, 43 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அன்னுார் பேரூராட்சியில், 15 வார்டுகளில், 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். புவனேஸ்வரி நகர், பழனி கிருஷ்ணா அவென்யூ, தர்மர் கோவில் வீதி, நாகமாபுதுார், குன்னத்துாராம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில், ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும், மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது.
குளம் போல் தேங்கி நிற்கிறது. வடிவதற்கு பல வாரங்களாகின்றன. இத்துடன் இந்திரா நகர் உள்ளிட்ட சில பகுதிகளில், கழிவு நீர் வடிகால் வசதி இல்லாததால், வாரம் ஒரு முறை கழிவு நீர் உறிஞ்சப்பட்டு வேறு இடத்தில் வெளியேற்றப்படுகிறது.
இதற்கு சில நேரங்களில் தனியார் வாகனங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இதற்காக வாகனம் கொள்முதல் செய்ய பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசு, 6,000 லிட்டர் கொள்திறன் கொண்ட டேங்கர் உடன் வாகனம் வாங்க, 43 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ஒதுக்கியுள்ளது.
இதையடுத்து இந்த வாகனம் கொள்முதல் செய்ய டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது. அன்னுார், தர்மர் கோவில் வீதி, புவனேஸ்வரி நகர், பழனி கிருஷ்ணா அவென்யூ பகுதியில், எட்டு மாதங்களாக மழை நீர் தேங்கி நிற்கிறது.
தற்போது வெறும் 7.5 எச்.பி., மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றும் பணி வாரக்கணக்கில் நடந்து வருகிறது. ஆனாலும் மீண்டும் மீண்டும் தண்ணீர் ஊற்றெடுப்பதால் அப்பகுதியில் நீர் வடியவில்லை. இந்த புதிய வாகனத்தின் மூலம் அதிக சக்தி உள்ள மோட்டார் பொருத்தி விரைவில் தேங்கியுள்ள நீரை அகற்ற முடியும் என்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

